இந்தியா
தனி பழங்குடி மாநிலத்திற்காகப் போராடிய தலைவர்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மரணம்
தனி பழங்குடி மாநிலத்திற்காகப் போராடிய தலைவர்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மரணம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனரும், ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன், தனது 81-வது வயதில் இன்று (ஆகஸ்ட் 4) காலமானார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், சிபுசோரனின் மகனுமான ஹேமந்த் சோரன், தனது X பக்கத்தில் உறுதிப்படுத்தினார். “மதிப்புமிக்க திஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் முற்றிலும் வெறுமையாக உணர்கிறேன்” என்று ஹேமந்த் சோரன் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். ஜார்க்கண்ட் மக்களால் ஷிபு சோரன் அன்புடன் ‘திஷோம் குருஜி’ என்றழைக்கப்பட்டார். பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி, ஷிபு சோரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “ஷிபு சோரன் அவர்கள் மக்களின்பால் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பொது வாழ்வில் உயர்ந்து வந்த அடித்தட்டு தலைவர். பழங்குடி சமூகம், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது எண்ணங்கள். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் பேசி இரங்கல் தெரிவித்தேன். ஓம் சாந்தி” என்று பிரதமர் தனது X பதிவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஷிபு சோரன், கடந்த ஜூன் கடைசி வாரத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.1944 ஜனவரி 11 அன்று ராம்பூருக்கு அருகில் பிறந்த ஷிபு சோரன், சந்தால் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். 1970களின் முற்பகுதியில் பழங்குடி நில உரிமை ஆர்வலராக அவர் உருவெடுத்தார். பீகாரில் இருந்து தனிப் பழங்குடி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன், 1973-ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியை அவர் இணைந்து நிறுவினார். 1980ல் முதல்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிபு சோரன், நாடாளுமன்றத்தில் பலமுறை உறுப்பினராகப் பணியாற்றி தேசியளவில் முக்கியத்துவம் பெற்றார். 1987-ல் JMM கட்சியின் தலைவரான அவர், சுமார் 38 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தார்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஞ்சியில் நடைபெற்ற JMM கட்சியின் 13-வது மத்திய மாநாட்டில், தலைமுறை மாற்றம் குறித்த அரசியலமைப்பு திருத்தப்பட்டது. அதன்படி, ஹேமந்த் சோரன் புதிய மத்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஷிபு சோரன் கட்சியின் ‘நிறுவனர் புரவலர்’ என்று அறிவிக்கப்பட்டார். 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 8 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஷிபு சோரன் பதவி வகித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஒரு தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஷிபு சோரன் இருந்துள்ளார்.