இலங்கை
சொத்து, பொறுப்பு விவரங்கள் வழங்காவிட்டால் நடவடிக்கை; இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு எச்சரிக்கை!
சொத்து, பொறுப்பு விவரங்கள் வழங்காவிட்டால் நடவடிக்கை; இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு எச்சரிக்கை!
எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு 9ஆம் எண் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 90இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மார்ச் மாதம் 31ஆம் திகதியிட்ட தங்கள் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கவேண்டிய அதிகாரிகள் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் அவற்றை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்காக அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை தாமதமாக சமர்ப்பிக்கப்படும் அறிவிப்புகளுக்கு சட்டத்தின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்று ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குப் பின்னரும் சமர்ப்பிக்கப்படும் அறிவிப்புகளை நிறுவனத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஒரு நிறுவனத் தலைவரால் நிராகரிக்கப்பட்டால், உடனடியாக ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.