பொழுதுபோக்கு
தேசிய விருது ஒன்னும் ஓய்வூதியம் இல்ல; ஷாருக்கான் சிறந்த நடிகர், விஜயராகவன் துணை நடிகரா? நடிகை ஊர்வசி ஆவேசம்!
தேசிய விருது ஒன்னும் ஓய்வூதியம் இல்ல; ஷாருக்கான் சிறந்த நடிகர், விஜயராகவன் துணை நடிகரா? நடிகை ஊர்வசி ஆவேசம்!
சினிமா உலகில் ஒவ்வொரு நடிகரும் பெரும் கௌரவமாகக் கருதப்படும் விருதுகளில் ஒன்று தேசிய விருது. ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருதுகளின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை விருது அறிவிப்புக்கு, பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மூத்த நடிகை ஊர்வசி தனக்கு விருது அறிவிக்கப்பட்டாலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:உள்ளொழுக்கு” திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை ஊர்வசி, மற்றும் நடிகை ஜானகி போடிவாலாவுடன் பகிர்ந்து கொண்டார். விருது பெற்றது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் தனது பெரும் வருத்தம் மற்றும் அதிருப்தியை ஊர்வசி வெளியிட்டுள்ளார். உள்ளொழுக்கு படத்தில் பார்வதி திருவோத்துக்கு இணையாக, தான் ஒரு முக்கிய முன்னணி கேரக்டரில் நடித்திருந்தபோதும், தன்னை ஏன் துணை நடிகை பிரிவில் கருதினர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதேபோல், பூக்காலம் திரைப்படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜயராகவன், முன்னணி நடிகர் பிரிவில் பரிசீலிக்கப்படாமல், துணை நடிகர் பிரிவில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ஊர்வசி, இது ஏன் நடந்தது என்று நடுவர் குழுவிடம் இருந்து விளக்கம் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஏசியநெட் நியூஸ் தொலைக்காட்சிக்கு ஊர்வசி அளித்த பேட்டியில், “விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன? எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன? இது தெளிவாக இருக்க வேண்டும்.அவர்கள் விரும்பியபடி விருதுகளை வழங்கிவிட்டு, நாங்கள் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது மாற வேண்டும். நான் இந்த கேள்விகளை இப்போது எழுப்பவில்லை என்றால், அடுத்த தலைமுறை கலைஞர்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? நடிகை ரீமா கல்லிங்கல் என்னிடம் ஒருமுறை, ‘உங்களைப் போன்ற ஒரு அனுபவமிக்க நடிகைக்கே இந்த நிலைமை என்றால், எங்களைப் போன்ற இளம் கலைஞர்களின் நிலைமை என்னவாக இருக்கும்?’ என்று சொன்னார்.சிறந்த நடிகர் பிரிவிலும் இதே நிலைமை நீடிப்பதாக வருத்தம் தெரிவித்த ஊர்வசி, ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்த கேரக்டரை முன்னணி கேரக்டராக கருதிய நடுவர்கள், “பூக்காலம்” திரைப்படத்தில் மிகவும் கடினமான நடிப்பை வெளிப்படுத்திய விஜயராகவனின் கதாபாத்திரம் ஏன் முன்னணி கதாபாத்திரமாக கருதப்படவில்லை. விஜயராகவன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் நடிப்பை எப்படி வேறுபடுத்திப் பார்த்தீர்கள்? ஒருவர் எப்படி துணை நடிகராகவும், மற்றவர் சிறந்த நடிகராகவும் ஆனார்? இதற்கு என்ன அளவுகோல்? நாங்களும் வரி செலுத்தும் குடிமக்கள் என்பதால் இத்தகைய கேள்விகளை எழுப்ப வேண்டும்.விஜயராகவன் அந்தக் கதாபாத்திரத்துக்காக, வயதான காலத்தில் பல மணி நேரம் மேக்கப் போடும் சிரமத்தை எதிர்கொண்டு நடித்தார். அதுமட்டுமே ஒரு சிறப்பு அங்கீகாரத்துக்குத் தகுதியானது. இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்த “ஆடுஜீவிதம் – தி கோட் லைஃப்” திரைப்படம், ஒரு அங்கீகாரம் கூட பெறாமல் போனது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது பெரும்பான்மை முடிவினால் எடுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், அதன் பொருள் என்ன? அதன் அடிப்படை என்ன? காரணம் சொல்லப்பட்டால், நாங்கள் திருப்தியாக இருப்போம்.இது யாரையும் குற்றம் சாட்டுவது பற்றியது அல்ல, ஆனால் தெளிவு அவசியம். விருது என்பது நாங்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓய்வூதியப் பணம் அல்ல. எனது நடிப்பு தரமற்றதாக இருந்தால், அதைச் சொல்லுங்கள். ‘ஆடுஜீவிதம்’ ஒரு சிறந்த படமில்லையா? விஜயராகவனின் நடிப்புக்கு ஏன் ஒரு சிறப்பு நடுவர் அங்கீகாரம் கூட வழங்கப்படவில்லை? இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் பேசியதாகவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தன்னை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் ஊர்வசி தெரிவித்துள்ளார்.