இந்தியா
டெல்லி சங்கிலி பறிப்பு சம்பவம்; இதுவரை எந்த பதிலும் இல்லை: அமித்ஷா மீது காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு!
டெல்லி சங்கிலி பறிப்பு சம்பவம்; இதுவரை எந்த பதிலும் இல்லை: அமித்ஷா மீது காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பியின் செயின் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்தமிழகத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் சுதா ராமகிருஷ்ணன், கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) காலை தனது சக எம்பி ராஜதி சல்மாவுடன் டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா ராமகிருஷ்ணனின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இந்த அதிர்ச்சி சம்பவம், தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.சங்கிலி பறிப்பு சம்பவத்திற்குப் பிறகு, எம்.பி சுதா ராமகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். “டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. உள்துறை அமைச்சரின் சக நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் கதி என்னவாகும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “டெல்லியில் பாதுகாப்பு என்பது இல்லை. இது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள், குழந்தைகள் என்று யாருக்கும் பாதுகாப்பான இடம் அல்ல, இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறுநாள் காலை நடைப்பயிற்சிக்கு செல்ல தனக்கு மன தைரியம் வரவில்லை இந்த சம்பவத்தில் தனது உடைகள் கிழிந்துபோனதாகவும் சுதா ராமகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.மேலும், சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு காவல்துறை ரோந்து வாகனம் அந்த இடத்திற்கு வந்தது. அப்போது, நடந்ததை ஒரு காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தபோது, அவர்கள் உடனடியாக சங்கிலி பறிப்பு திருடனை பிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, அவரது தொலைபேசி எண்ணை மட்டும் பெற்றுக்கொண்டு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது காவல்துறை விசாரணையின் மெத்தனத்தைக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து பலரிடம் பேசியபோது, டெல்லியில் இது சாதாரண விஷயம் என்று கூறியுள்ளனர். “பெண்கள் மாலை நேரத்திற்குப் பிறகு வெளியே செல்ல வேண்டாம், கைபேசியை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள், கனமான நகைகளை அணியாதீர்கள் என்று கூறுகிறார்கள். இதுவா தலைநகரின் நிலை?” என்று சுதா ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.