பொழுதுபோக்கு
நீங்க வெளியூரா? இந்த ஊர் பொண்ணுங்க கிழிச்சிருப்பாங்க; சொந்த வசனம் பேசிய ஜெயராம்: இந்த ஹிட் படம்தான்!
நீங்க வெளியூரா? இந்த ஊர் பொண்ணுங்க கிழிச்சிருப்பாங்க; சொந்த வசனம் பேசிய ஜெயராம்: இந்த ஹிட் படம்தான்!
குடும்ப சென்டிமென்ட் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் விக்ரமன். அவரின் படங்கள் அனைத்துமே குடும்பபாங்கான, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருக்கும். அதிலும் முக்கியமாக பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக வெற்றி பெறும். 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இயக்குநராக இருந்த விக்ரமனின் வெற்றிப் படங்களின் வரிசையில் ஒன்று 1993ம் ஆண்டு வெளியான ‘கோகுலம்’ திரைப்படம். சிற்பியின் இசையில் நடிகர் அர்ஜுன், பானுப்ரியா, ஜெயராம், ஜெய்சங்கர், வடிவேலு, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் ‘கோகுலம்’. தன்னை காதலித்த காதலன் எதிர்பாராத இறப்புக்கு பிறகு அவனின் குடும்பத்திற்காக தன்னுடைய அடையாளத்தை மாற்றி காதலனின் குடும்ப பொறுப்புகளை ஏற்கும் கதாநாயகியாக மிகவும் யதார்த்தமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை பானுப்ரியா. காதலனின் பொறுப்புகளை தன்னுடைய கடமையாக ஏற்று கொண்டு அங்கு அவளுக்கு கிடைத்த அவப்பெயர்களை எல்லாம் சகித்து கொண்டு ஒரு கனமான கதாபாத்திரத்தில் பானுப்ரியா, ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கும் அர்ஜுன், பானுப்ரியாவின் பிளாஷ்பேக் பற்றி தெரியாமல் ஒருதலையாக காதலிக்கும் ஜெயராம் என அனைவரும் அவரவரின் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தி படத்தை ஒரு வெற்றிப்படமாக கொடுத்தனர். படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது சிற்பியின் இசை.இந்தப் படம் குறித்து தனது அனுபவங்களை படத்தின் இயக்குநர் விக்ரமன், கூறி உள்ளார். படத்தில் நடிக்க மலையாளத் திரையுலகில் பிரபலமான ஜெயராமை அழைத்ததாகவும், படப்பிடிப்புத் தளத்தில் அவர் செய்த சில சர்ப்ரைஸ் விஷயங்கள் குறித்தும் இயக்குநர் விக்ரமன் பேசினார்.”ஒரு காட்சியில், ஊருக்குப் புதிதாக வரும் பானுப்ரியா, பூட்டிய வீட்டின் முன் நிற்பார். அப்போது, சைக்கிளில் வேகமாகச் செல்லும் ஜெயராம், பானுப்ரியா மீது சேற்றைத் தெறிக்கவிட்டுச் செல்வார். உடனே எதிர் ரியாக்ஷன் ஒன்று அவரது கனவில் வந்து செல்லும். அதில், பானுப்பிரியா ஆவேசமாக திட்டுவது போல் இருக்கும். ஆனால், ரியாலிட்டியில் பானுப்பிரியா மிக சாதுவாக நடந்துகொள்வார். பரவாயில்லை, யாராவது வேண்டுமென சேற்றை வாரி இறைப்பார்களா? என்று பானுப்பிரியா கூறுவார்.அந்தக் காட்சி அதோடு முடிவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் ஜெயராம், ‘சார், நான் ஒன்று செய்யட்டுமா?’ என்று கேட்டுவிட்டு, சைக்கிளில் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, பானுப்ரியாவிடம் ‘நீங்கள் இந்த ஊருக்குப் புதுசா? அதான் பார்த்தேன்… நம்ம ஊர்ப் பெண்களாக இருந்தால் கிழித்திருப்பார்கள்!’ என்று நகைச்சுவையாகச் சொல்வார். அந்தக் காட்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது” என இயக்குநர் விக்ரமன் நினைவு கூர்ந்தார்.கோகுலத்தில் நடந்த சம்பவம்