பொழுதுபோக்கு
புதுக்கோட்டை மன்னரே தேடி வந்து பெண் கேட்ட தமிழ் சினிமா காந்தக் கண்ணழகி: ஏழை டிரைவரை காதலித்த கதை தெரியுமா?
புதுக்கோட்டை மன்னரே தேடி வந்து பெண் கேட்ட தமிழ் சினிமா காந்தக் கண்ணழகி: ஏழை டிரைவரை காதலித்த கதை தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில், அவரின் அழகில் மயங்கி புதுக்கோட்டை மன்னர் அவரை காதலித்துள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி அவரை விட்டுவிட்டு, தனது வீட்டின் டிரைவரை காதலித்தது பலரும் அறியாத ஒரு தகவல்.1935-ம் ஆண்டு கர்வான் இ ஹையத் என்ற இந்தி படத்தில் ராணியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டி.ஆா.ராஜகுமாரி. 1936-ம் ஆண்டு குமார குலோத்துங்கன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து கச்ச தேவயானி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து, எம்.கே.தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படத்தில் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற பெருமை ஹரிதாஸ் படத்திற்கு உண்டு. சிவாஜியுடன் அன்பு, மனோகரா, தங்கமலை ரகசியம், தங்க பதுமை, எம்.ஜி.ஆருடன், பணக்காரி, குலேபகாவலி, புதுமை பித்தன், பாசம், பெரிய இடத்து பெண் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.கவர்க்கி கன்னி, காந்த கண்ணழகி என பல அடைமொழியுடன் வலம் வந்த டி.ஆர்.ராஜகுமாரி, தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை. இவரின் அழகில் மயங்கி அப்போது புதுக்கோட்டை மன்னாராக இருந்தவர் இவரை திருமணம் செய்துகொள்ள தூது விட்டுள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி மன்னராக இருந்தாலும் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.ராமண்ணாவும் தனது அக்காவிடம் யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்க, அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.இதன் காரணமாக அக்கா டி.ஆர்.ராஜகுமாரியை கண்காணிக்க ஒரு ஆளை தயார் செய்துள்ளார். அந்த நேரத்தில், ராஜகுமாரி வீட்டில் டிரைவர் ராகவன் என்பவர் அவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அனைவருக்கும் தகவல் கொடுக்க, அந்த டிரைவரை சராமாரியாக அடித்து வெளியில் அனுப்பியுள்ளனர். இதை பார்த்த டி.ஆர்.ராஜகுமாரி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு அழுதுள்ளார். அதன்பிறகு டிரைவர் ராகவன், அந்த ஊரில் இருந்து கிளம்பி, நெல்லை அருகில் கேரளா எல்லையில் செட்டில் ஆகியுள்ளார்.இந்த சம்பவத்திற்கு பிறகு டி.ஆர்.ராஜகுமாரி யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடைசிவரை தனியாக வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு தனது 77 வயதில் மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி தான் உச்சத்தில் இருந்தாலும், ஒரு டிரைவரின் எளிமையான மனதிற்கு மதிப்பு கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மன்னர் காதலித்தது, டி.ஆர்.ராஜகுமாரி டிரைவர் ராகவனை காதலித்த தகவலை இயக்குனர், தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளார்.