விளையாட்டு

அவர் ஓனர் இல்ல; எங்க குல தெய்வம்… கிரிக்கெட் ஜாம்பாவனை புகழும் சென்னை பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!

Published

on

அவர் ஓனர் இல்ல; எங்க குல தெய்வம்… கிரிக்கெட் ஜாம்பாவனை புகழும் சென்னை பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன், மிரட்டல் சுழற்பந்து வீச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவராக இவர் திகழ்ந்தார். கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக 1983 உலககோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை வாகை சூடியதற்கு, இவர் ஆற்றி பணிகள் அளப்பரியது. இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்களின் முகமாக பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்திருக்கிறார். இந்திய அணியில் கடந்த 1981-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த அவர்  43 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 2 சதம் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2062 ரன்களை எடுத்தார். இதேபோல், 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதம் மற்றும் 27 அரைசதங்களுடன் 4091 ரன்கள் எடுத்தார். அவர் அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருக்கிறார். ஸ்ரீகாந்த் தனது கடைசி ஆட்டதை 1992-ம் ஆண்டு ஆடிய பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், இந்திய கிரிக்கெட்டின் அங்கமாக இருந்த அவர், 2011 ஆம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் கோப்பை வெல்ல அடித்தளமிட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பணியாற்றி, தோனி கோப்பை வென்று கொடுக்க அனைத்து விதமான ஆதரவுகளையும் அளித்தார்.கிரிக்கெட் ரசிகர்களால் ‘சீக்கா’ என அன்புடன் அழைப்படும் ஸ்ரீகாந்த், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலக்கி வருகிறார். மேலும், இளம் வீரர்களை ஊக்குவிப்பதில் முன்னோடியாகவும் திகழ்கிறார். சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இவை தவிர, தொழிலதிபராகவும் இருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை அன்போடும், பாசத்தோடும் கவனித்து கொள்வதாக அவரது பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். தங்களுக்கு நிறைவான ஊதியம், உணவு, உடை, இருப்பிடம் வழங்கி வரும் ஸ்ரீகாந்த் தான் தங்களது கடவுள் என்றும், தங்களின் குல தெய்வம் என்றும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுகிறார்கள். அவரிடம் பணியாற்றும் ஊழியர்கள் எந்தக் கவலையும் இன்றி நீண்ட ஆண்டுகளாக அவரின் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் தெரிகிறார்கள். ஸ்ரீகாந்த் நடத்தும் பெட்ரோல் பங்க் ஒன்று சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் ஊழியர்கள் அரோரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில் கடந்த 3 ஆண்டுகளாக பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் கலை என்ற ஊழியர் பேசுகையில், “இது சாரின் (கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்) பெட்ரோல் பங்க் என எனக்குத் தெரியாது. ஆனால், நான் இங்கு வேலைக்கு சேர்ந்ததில் இருந்து எனது குடும்பத்தின் நிலை மாறி இருக்கிறது. எனது குடும்பத்திற்கு ஏரளமான உதவிகளை செய்துள்ளார். என் பையன் படிப்பு செலவை அவர் தான் பார்த்துக் கொள்கிறார். டி.வி-யில் பேசுவதைப் போல எங்களிடம் ஜாலியாக பேசுவார். ஒரு ஓனர் போல அந்த பகட்டை காட்டிக் கொள்ள மாட்டார். தன் வீட்டு பிள்ளை போல பார்த்துக் கொள்வார். மற்ற பெட்ரோல் பங்க்குகளை போல் அல்லாமல், இங்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கொடுக்கிறார். சாப்பாடு, ரூம் வாடகை எல்லாம் கொடுக்கிறார்கள். லீவு வேண்டுமானால் கொடுத்து விடுவார்கள். எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. எனது பையனுக்கு பிறந்தநாள் என்று அவரிடம் சொன்னபோது, பாக்கெட்டில் இருந்த பணத்தை அப்படியே எண்ணாமல் கொடுத்தார். அவர் எங்கள் கடவுள், எங்கள் குல தெய்வம். என்னுடைய அப்பா, அம்மா எல்லாமே சார் தான். இந்த வீடியோ மூலமாக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்திடம் 40 ஆண்டுகளாக பணிபுரிவர் பேசுகையில், “நான் சிறுவயது முதலே சாரிடம் வேலை செய்து வருகிறேன். நாங்கள் கிட்டத்தட்ட 10, 15 நபர்கள் சாருக்காக 35, 40 வருடங்களாக வேலை செய்து வருகிறோம். எங்களை அவர் ஒரு வேலைக்காரன் போல பார்ப்பதில்லை. அவரின் குடும்பத்தில் ஒருவராக எங்களைப் பார்க்கிறார். எங்களது பிள்ளைகள் பலரும் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். ஐ.டி கம்பெனிகளில் வேலையில் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு லட்சம், 2 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். அவர் எங்களிடம் சொல்வதெல்லாம், இதுபோன்று வீடுகளில், பங்கில் வேலை செய்வது உங்கள் தலைமுறையுடன் போகட்டும். உங்களுக்கு அடுத்த தலைமுறையினர் வெளிநாடுகளில், ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்ய வேண்டும் என்பார். அதுபோல், எங்கள் பிள்ளைகளின் அனைத்து செலவுகளையும் அவர் தான் பார்த்துக் கொள்கிறார். அதனால், எங்களுக்கு வேறு எங்கு சென்றும் வேலை செய்ய தோன்றவில்லை. அவர் மிகவும் நல்ல மனிதர் என்பதை விட, அவர் எங்களின் கடவுள் எனச் சொல்லலாம். எங்கள் காலம் முடியும் வரை அவருக்குத்தான் நாங்கள் சேவை செய்வோம்.” என்று அவர் கூறியுள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version