விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர்: அனைத்து போட்டிகளில் இருந்தும் சேதேஷ்வர் புஜாரா ஓய்வு

Published

on

இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர்: அனைத்து போட்டிகளில் இருந்தும் சேதேஷ்வர் புஜாரா ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு பின், டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவர் என அழைக்கப்படும் சேதேஷ்வர் புஜாரா, 37 வயதில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேஸ்ட்மேனாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்திய சேதேஷ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தனது ஒய்வு குறித்து அவர், தனது தந்தை அரவிந்திடம் தெரிவிக்கப்பட்டபோது, “இன்னும் ஒரு ரஞ்சி டிராபி சீசன் விளையாடக்கூடாதா?” என்று அவர் கேட்டுள்ளார். இது அவரது மகனின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டைக் காட்டுகிறது. அப்போது வேண்டாம் என்று புஜாரா சொனன் ஒற்றை வார்த்தையில், ஒரு தசாப்தத்திற்கும் மேலான அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது.குஜராத்தின் ராஜ்கோட் போன்ற ஒரு சிறிய நகரத்தில், ‘சின்ட்டு’ என்று அழைக்கப்பட்ட சேதேஷ்வர், தன் 3 வயதிலேயே கிரிக்கெட் பேட்டுடன் பந்தைத் துரத்தத் தொடங்கினார். அவரது 8 வயதில், அவரது தாயார் ரீனா ஒரு பழைய மெத்தையிலிருந்து அவருக்கு சிறிய பேட்களைத் தைத்துக் கொடுத்தார். 14 வயதில் ஒரு பிசிசிஐ  போட்டியில் முச்சதம் அடித்தார். 18 வயதில், அண்டர்-19 உலகக் கோப்பையில் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, தற்போது 37 வயதில் பேட்டிற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.ராகுல் டிராவிட்டின் வாரிசு: ஓர் அரிய சாதனைஇந்தியாவின் டெஸ்ட் அணிக்கு ராகுல் டிராவிட்டின் 3-வது வீரர் இடத்தைப் பூர்த்தி செய்த புஜாரா, தனது 103 டெஸ்ட் போட்டிகளில் 7,195 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 43, இது திலீப் வெங்சர்க்கார் மற்றும் முகமது அசாருதீன் போன்ற ஜாம்பவான்களை விடச் சிறந்தது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, விவிஎஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்குப் பின் 8-வது இடத்தில் உள்ளார்.அவரது கிரிக்கெட் வாழ்வில், வேறு எந்த இந்திய வீரருக்கும் இல்லாத ஒரு பெருமை உண்டு. அது, 2018-ல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. அந்தத் தொடரில், புஜாரா 3 சதங்கள் உட்பட 521 ரன்கள் குவித்தார். இந்த தொடரில், 1,258 பந்துகளை எதிர்கொண்டார். இந்த அசாத்தியமான ஆட்டத்தால், அவர் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். 71 வருடங்கள் மற்றும் 11 சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு, ஒரு ராஜ்கோட் வீரர் இந்த அரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார். மற்ற வீரர்கள் அதிக ரன்கள், சதங்கள், புகழ் மற்றும் செல்வம் சம்பாதித்திருக்கலாம், ஆனால் புஜாராவின் “ஆஸ்திரேலியா” என்ற அந்த மறக்க முடியாத அத்தியாயம், வேறு எவராலும் நிகழ்த்த முடியாதது.இந்திய கிரிக்கெட்டில், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களில் இருந்து வந்த வீரர்களின் மத்தியில், புஜாரா ஒரு விதிவிலக்கு. “ராஜ்கோட் போன்ற ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்த நான், எனது பெற்றோருடன் நட்சத்திரங்களை நோக்கமாகக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற கனவு கண்டேன். இந்தக் கிரிக்கெட் எனக்கு விலைமதிப்பற்ற வாய்ப்புகளையும், அனுபவங்களையும், அன்பையும், எனது மாநிலத்தையும் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வாய்ப்பையும் தரும் என்று அப்போது எனக்குத் தெரியாது” என்று சமூக வலைதளத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் எழுதினார்.அனைத்து சாதனைகளையும் விடுத்து, தற்போது தனது குடும்பத்திற்காக ஓய்வு முடிவை எடுத்துள்ளார் புஜாரா. “எனது தந்தை வயதாகி வருகிறார், அவருக்கு நான் அருகிலிருந்து உதவ வேண்டும். எனது குழந்தை வளர்ந்து வருகிறது, என் மனைவிக்கும் வீட்டில் கூடுதல் உதவி தேவை. எனது வாழ்க்கை முழுவதும் என் வளர்ச்சிக்காக இவர்கள் இருவரும் பெரிதும் உதவினர். இப்போது அவர்களுக்குத் துணையாக நான் இருக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் கூறினார்.இன்று முதல், புஜாரா குடும்பத்தில் வாழ்க்கை மாறும். இனி அவர்கள் உணவருந்தும்போது கிரிக்கெட் குறித்துப் பேச மாட்டார்கள், தந்தையும் மகனும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் செய்த நெட் பயிற்சியையும் இனி திட்டமிட மாட்டார்கள். ஆனால், இந்திய கிரிக்கெட்டின் இந்த அமைதியான போராளி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version