இலங்கை
செல்வச்சந்நிதி மஹோற்சவம் சுகாதார விதிகள் அறிவிப்பு!
செல்வச்சந்நிதி மஹோற்சவம் சுகாதார விதிகள் அறிவிப்பு!
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைமறுதினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனையொட்டி வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தால் பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்புக் கடைகள், மிக்சர் கடைகள், ஐஸ்கிறீம் கடைகள், கருஞ்சுண்டல், தும்புமிட்டாய். ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி சபைகளின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
2. உணவு கையாளும் நிலையங்களில் கடமைபுரிபவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் கடமைபுரிபவர்கள் அனைவரும் நடப்பாண்டிற்கான மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பதுடன் தனிநபர் சுகாதாரம் பேணுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும். தற்காலிகக் கடமையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக மருத்துவச் சான்றிதழ் பெற வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினை தொடர்புகொள்ளவும்.
3. தண்ணீர்ப்பந்தல்கள், சர்பத் கடைகள் மற்றும் ஐஸ்கிறீம் கடைகள் நடத்துபவர்கள் அனுமதிபெறப்பட்ட கடைகளில் நீர்ப் பரிசோதனை அறிக்கை வைத்திருப்பவர்களிடம் இருந்து ஐஸ் கட்டிகளைக் கொள்வனவு செய்வதுடன் அதற்கான பற்றுச்சீட்டினையும் தம்வசம் வைத்திருத் தல் வேண்டும்.
4. ஆலயத்தினது சுற்றாடலில் புகையிலை சார்ந்த பொருள்களை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
5. வர்த்தக நிலையங்கள், அன்னதான மடங்கள், தண்ணீர்ப் பந்தல்களில் பயன்படுத்தப்படும் நீரானது குடிக்கத்தக்கது (நீர்ப்பரிசோதனை அறிக்கை) என்பதனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பட்சத்தில் நகராட்சி மன்றத்தினால் வழங்கப்படும் குடிதண்ணீர் மாத்திரமே பெறப்பட வேண்டும்.
6. பொதுச்சுகாதாரம் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை உற்சவகால சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை நிலையத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.
7. வர்த்தக நிலையங்கள் மற்றும் மடங்களிலும் தண்ணீர்ப் பந்தல்களிலும் இருந்து வெளியேறும் திண்மக்கழிவுகளைக் குப்பைத்தொட்டி கொண்டு ஓரிடத்தில் சேகரிப்பதுடன் அதனை உரியமுறையில் அகற்றுவதனை உறுதிப்படுத்த வேண்டும்.
8. ஆலயச் சூழலில் பிளாஸ்ரிக் பாவனை, பச்சை குத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
9. காவடி குத்துபவர்கள் நகராட்சிமன்றத்தின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் தொற்ற நீக்கும் வசதியும் ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். (உபகரணங்கள்கொதிநீரிலிட்டு தொற்று நீக்கும் வசதிகள்)
10.பொதுச்சுகாதாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மீறுப்வர்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்ககப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.