இலங்கை
தீவகத்திலும் மனிதப் புதைகுழி உயிர்ச்சாட்சியங்களும் உண்டு!
தீவகத்திலும் மனிதப் புதைகுழி உயிர்ச்சாட்சியங்களும் உண்டு!
வேலணை பிரதேசசபையில் சுட்டிக்காட்டு
தீவகத்தில் இராணுவ நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடைய மனிதப் புதைகுழிகளுக்கு வலுவான உயிர்ச்சாட்சியங்கள் உள்ளன. எனவே, அவற்றின் அடிப்படையில் அகழ்வும் விசாரணையும் இடம்பெறவேண்டும் என்று வேலணை பிரதேசசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது.
வேலணை பிரதேசசபையின் அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர் பிரகலாதன்
மேலும் தெரிவித்ததாவது:-
1990ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எண்பதுக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவுப் பகுதியில் உள்ள சில கைவிடப்பட்ட கிணறுகளில் வீசப்பட்டன. இதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் வாழும் சாட்சிகள் உள்ளனர். எனவே, அவர்களின் தகவலுக்கு அமைய அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான விடயங்கள் இன்று பெரியளவில் பேசப்படுகின்றன. அந்தப் புதைகுழியின் பின்னாலுள்ள துன்பத்தையொத்ததே மண்டைதீவு மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயமுமாகும். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டுஉண்மைகளை நாங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார். இதையடுத்து, உரிய ஆதாரங்கள் திரட்டப்பட்ட கனதியான அறிக்கையொன்றை துறைசார் தரப்புகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.