இலங்கை

போர்க் காலத்திலும் அபிவிருத்தி குறித்து சிந்தித்த இனம் எங்களுடையது!- யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர்

Published

on

போர்க் காலத்திலும் அபிவிருத்தி குறித்து சிந்தித்த இனம் எங்களுடையது!- யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர்

வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ என்னும் தொனிப்பொருளில் அமைந்த நல்லூர் நீர்க் கண்காட்சியின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையன்று 23.08.2025 மாலை குறித்த கண்காட்சி ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்கள், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு சான்றிதழும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 ஓய்வு நிலை பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன், யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறன் மற்றும் நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். 

Advertisement

 இந்நிகழ்வில் பங்கேற்ற யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

மிக நீண்ட நாளைக்கு பிறகு நல்லூர் திருவிழாவுக்கு வந்திருக்கிறேன். 

உண்மையிலேயே நான் 1993, 1994 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு பின்புறமாகவுள்ள பிராமணக்கட்டுக் குளப்பகுதி சுற்றாடலில் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தினர் அறிவியல் பொருளாதார கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பார்கள். 

Advertisement

ஆறாம், ஏழாம் ஆண்டு படிக்கும் காலத்தில் அடிக்கடி அதனைப் பார்க்கப் போவோம். ஆக்கி வாயுவில் இருந்து மின்னை உருவாக்கும் இயந்திரத்தை இயங்கச் செய்வது, பேரூந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவது, புகையிரத நிலைய வடிவமைப்பு, வழுக்கையாறு திட்டங்கள் போன்றவற்றையெல்லாம் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அபிவிருத்தியையும் குறித்து சிந்தித்த ஒரு இனம் எங்களுடையது.

 அதனை இப்போது நினைத்தாலும் புளாங்கிதமாக உள்ளது. நாங்கள் எங்களுடைய நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு இனமாக போராட்ட காலத்தில் இருந்தோம். மீளவும் இந்த நீர்க் கண்காட்சி சூழலைப் பார்க்கும் போது அதனை மீளவும் நினைவுபடுத்த வேண்டும் போல் இருந்தமை மிகவும் சிறப்பான விடயம். அதில் எனது பாடசாலை மாணவர்களும் பங்குபற்றி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்வடைகிறேன்.

நீர் தொடர்பாக எனது பட்ட மேற்படிப்புகளில் உவர்நீர்த்தடுப்பணையை அமைப்பதால் எவ்வாறு நன்னீரை சேமிக்க கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் ஆய்வு செய்திருக்கிறேன். 

Advertisement

அதன் நோக்கம் கடலில் வீணாக சென்று சேரும் மழை நீரை சேமித்தலாகும். நீங்கள் இங்கிருந்து நயினாதீவு, ஊர்காவற்றுறை செல்லும் போது தையில் இருந்து வைகாசி வரைக்கும் அந்த இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதை அவதானிக்கலாம். அங்கிருந்த கிணறுகளில் உள்ள தண்ணீரை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று விஞ்ஞான பீட ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த போது அந்தக் காலப்பகுதிகளில் கிணறுகளில் உள்ள உவர்த் தன்மை குறைவாக இருப்பதை அவதானித்திருக்கிறேன்.

 இன்னும் மேலதிகமாக மழை நீரை சேமிக்க உவர்நீர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கலாமா? அல்லது ஆழத்தை கூட்டலாமா எனச் சிலர் கேட்பார்கள். இரண்டுமே செய்ய முடியாதிருக்கும். ஏனெனில் உவர்நீர் தடுப்பணையின் உயரத்தை கூட்டினால் நிலப்பகுதி வெள்ளக் காடாகிவிடும். 

ஏனெனில் நாங்கள் பல தாழ் நிலங்களில் வீடுகளை கட்டியிருக்கிறோம், வீட்டு முற்றங்களிலும் கல் பதித்து தண்ணீர் உட்புகா வண்ணம் நிலத்தை முழுவதுமாக மூடி வருகிறோம். ஆழத்தைக் கூட்டுவோமாக இருந்தால் உவர் நீர் உள்ளே வந்துவிடும். 

Advertisement

 இந்த கண்காட்சியில் மாணவர்களை ஈடுபடுத்தியமை சிறப்பான அம்சமாகும். ஏனெனில் அவர்கள் தான் இந்த விழிப்புணர்வை சமூகத்திடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்கள். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் அதியுயர் பெறுபேறுகளை பெறும் அனேகமான மாணவர்கள் சமூகமயப்படுத்தப்படாத மாணவர்களாக இருப்பதால் அவர்களால் எமது சமூகத்துக்கு பிரயோசனமில்லை. சிறந்த பெறுபேறுகளையும் பெறும் சமூக சிந்தனையுள்ள மாணவர்களால் தான் பாடசாலையின், சமூகத்தின் ஒட்டுமொத்த வெற்றி தங்கியுள்ளது. 

இந்தக் கருத்தினை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் அவர்களும் வலியுறுத்தி இருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version