பொழுதுபோக்கு

போலி வாரிசு சான்றிதழ்; ஸ்ரீதேவி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: கணவர் போனி கபூர் நீதிமன்றத்தில் வழக்கு!

Published

on

போலி வாரிசு சான்றிதழ்; ஸ்ரீதேவி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: கணவர் போனி கபூர் நீதிமன்றத்தில் வழக்கு!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மறைந்த ஸ்ரீதேவியின் சொத்துக்களை போலி வாரிசு சான்றிதழ் மூலம் அபகரிக்க நினைப்பதாக அவரது கணவர் போனி கபூர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தாம்பரம் தாசில்தார் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி 1988-ஆம் ஆண்டு சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) வாங்கிய அசையா சொத்து ஒன்றின் மீது மூன்று நபர்கள் சட்டவிரோதமாக உரிமை கோருவதாக அவரது கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது குறித்து போனி கபூர் நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி, ஸ்ரீதேவி 1988, ஏப்ரல் 19 அன்று இந்தச் சொத்தை வாங்கினார். அன்று முதல், அவரும் அவரது குடும்பத்தினரும் அந்தச் சொத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, அந்தச் சொத்து ஒரு பண்ணை வீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் முதலில் எம்.சி. சம்பந்த முதலியார் என்பவருக்குச் சொந்தமானது. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே 1960, பிப்ரவரி 14 அன்று சொத்துப் பிரிவினை தொடர்பான ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஸ்ரீதேவி அந்தச் சொத்தை வாங்கி, விற்பனைப் பத்திரத்தையும் முறையாகப் பதிவு செய்திருந்தார்.தற்போது திடீரென, மூன்று நபர்கள் இந்தச் சொத்தில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறத் தொடங்கினர். அவர்கள், சம்பந்த முதலியாரின் மூன்று மகன்களில் ஒருவரின் இரண்டாவது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்று கூறி, தாம்பரம் வட்டாட்சியரிடம் இருந்து 2005-ல் ஒரு வாரிசுரிமைச் சான்றிதழைப் பெற்றிருந்தனர். போனி கபூர், இந்த வாரிசுரிமைச் சான்றிதழ் போலியானது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது மனுவில், மூல நில உரிமையாளரின் குடும்பம் மைலாப்பூரில் வசித்தபோது, தாம்பரம் வட்டாட்சியர் எவ்வாறு இந்தச் சான்றிதழை வழங்கினார் என்றும், இரண்டாவது மனைவி 1975, பிப்ரவரி 5 அன்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறினாலும், முதல் மனைவி 1999, ஜூன் 24 அன்றுதான் இறந்துள்ளார். எனவே, இந்தத் திருமணம் சட்டபூர்வமானதாகக் கருத முடியாது என்றும், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், இந்த மூன்று நபர்களும் வாரிசுகளாகக் கருதப்பட முடியாது என்றும் போனி கபூர் வாதிட்டுள்ளார்.இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version