இலங்கை
எதிரணிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்தை அசைக்காது; ரில்வின் சில்வா தெரிவிப்பு!
எதிரணிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்தை அசைக்காது; ரில்வின் சில்வா தெரிவிப்பு!
எதிரணிகளின் ஒன்றிணைவு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவால் கிடையாது. கள்வர்களைக் காப்பதற்காகவே அவர்கள் கூட்டுச்சேர்ந்துள்ளனர் என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணிகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- கடந்த காலங்களிலும் எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட்டன. எவ்விதச் சவாலும் ஏற்படவில்லை. கூட்டுச் சேர்ந்துள்ளவர்களில் 90 சதவீதமானோருக்கு வழக்குகள் உள்ளன. ஆகவேதான் குற்றமிழைத்தவர்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கூட்டு சேர்ந்துள்ளனர். எனினும், சட்டம் தனக்குரிய கடமையை உரிய வகையில் செய்யும். சட்டமென்பது அனைவருக்கும் சமம். சட்டத்தை செயற்படுத்தும் போது அதற்கு எவரேனும் தடையேற்படுத்த முற்பட்டால் அது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயற்படாகவே அமையும்- என்றார்.