இலங்கை
கிடைத்தற்கரிய பொக்கிஷங்களே வடக்கு மாகாணத்தின் வளங்கள்; சரியாகப் பயன்படுத்தாமை கசப்பான உண்மை
கிடைத்தற்கரிய பொக்கிஷங்களே வடக்கு மாகாணத்தின் வளங்கள்; சரியாகப் பயன்படுத்தாமை கசப்பான உண்மை
வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை. ஆனால் எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வவுனியாப் பல்கலைக்கழக வியாபார இணைப்பு அலகு மற்றும் முயற்சியாண்மை கற்கைநெறி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தகச் சந்தைக்கண்காட்சியை பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் திறந்து வைத்தபோதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; அதிகளவு வளங்களைக்கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டமே இருக்கின்றது. ஆனால் வறுமையிலும் உச்சமான மாவட்டமாக அதுவே இருக்கின்றது. எங்கள் வளங்களை நாங்கள் உரியவகையில் பயன்படுத்தவில்லை என்பது தான் இதனூடாகப் புலப்படுகின்ற உண்மை.
நாங்களும் இலங்கையின் முதற்தர மாகாணமாக மாறவேண்டும். பொருளாதாரத்துக்கு அதிகூடிய பங்களிப்புச் செய்கின்ற மாகாணமாக மாறவேண்டும். அதற்குரிய அடித்தளங்களை அமைப்பதற்குரிய காலச்சூழல் இப்போதுள்ளது. போர் முடிந்த காலத்தில் எமது மாகாணத்தில் ஒன்றிரண்டு முயற்சியாளர்கள் தான் இருந்தார்கள். இன்று அது அதிகரித்திருக்கின்றது. அன்று அவர்களின் உற்பத்திகளின் முடிவுகள் சிறப்பாக அமையவில்லை. ஆனால் இன்று சிறப்பாக உள்ளன. இதை இன்னும் விரிவாக்கவேண்டும். குறிப்பாக எங்களின் பலமான விவசாயம் மற்றும் கடல்வளத்திலிருந்து பெறுமதிசேர் உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும். எங்களுக்கு அயலிலுள்ள இந்தியாவிலும் பனை மர உற்பத்தியை பெறும்திசேர் உற்பத்தியாக மாற்றி பல பொருள்களை உற்பத்தி செய்கின்றார்கள். ஆனால் நாங்கள் பனை வளத்தைக் கொண்டுள்ள போதும் பெறுமதிசேர் உற்பத்திப் பொருள்களாக மாற்றம் செய்வதில் பின்னிலையில் இருக்கின்றோம் -என்றார்.