இலங்கை
சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப்பணிக்கு அனுமதி!
சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப்பணிக்கு அனுமதி!
மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர்க் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதனை அறிய கிழக்கு பிராந்திய இராணுவக் கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதிவான் தஸ்னீம் பௌஸான் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார் .
மேலும், இதுதொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான சட்டமாநாடு நேற்றுமுன்தினம் மூதூர் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று. 25 வயதிற்குக் குறைந்த ஆண் ஒருவருடையது. மற்றையது. 25-40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது. அடுத்தது 40 – 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் மாவட்ட சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய சட்டமருத்துவ அதிகாரி, இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்று கூறினார். இந்தக் காணி அரச காணியாக உள்ள போதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம்,பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசசபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த அறிக்கைகளைஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்படவேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அந்தப்பகுதியில் இடம்பெற்றபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.