இலங்கை
சர்வதிகாரத்தைத் தொடர்ந்தால் எதிரணிகளின் போர் தீவிரமாகும்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை
சர்வதிகாரத்தைத் தொடர்ந்தால் எதிரணிகளின் போர் தீவிரமாகும்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தி தனது சர்வதிகாரத்தைக் கைவிடாவிட்டால், எதிரணிகளின் கூட்டு அரசியல் போர் மேலும் வலுவடையும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எச்சரித்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்ததாவது:-
இலங்கையில் பல கட்சிகள் இருக்கின்றன. இவ்வாறு கட்சிகள் இருந்தால் தான் ஜனநாயகம் வலுவடையும். ஆளுங்கட்சி இழைக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் உரிமை எதிரணிகளுக்கு உள்ளது. இலங்கையை வடகொரியா போன்று ஆக்குவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து எதிரணிகளும் ஒரு மேடைக்கு வந்துள்ளன. அதனால் இந்த அரசாங்கம் தான் கூறுவது மட்டுமே சரி என்ற நினைப்பில் சர்வாதிகாரமாக செயற்படக்கூடாது. அவ்வாறு செயற்பட முற்பட்டால் அதற்கு எதிராக எதிரணிகளின் கூட்டு நடவடிக்கை தொடரும். நாம் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முற்படவில்லை. காலை வாரவும் போவதில்லை. அதேபோல எமது அரசியல் பயணத்தை முடக்குவதற்கும் இடமளிக்கப் போவதில்லை-என்றார்.