பொழுதுபோக்கு
ரூ. 500 கோடி வசூலித்த 3-வது படம்… ஷாருக்கான், விஜயை ஓரம் கட்டிய ரஜினி… கூலி நிகழ்த்திய மாபெரும் சாதனை!
ரூ. 500 கோடி வசூலித்த 3-வது படம்… ஷாருக்கான், விஜயை ஓரம் கட்டிய ரஜினி… கூலி நிகழ்த்திய மாபெரும் சாதனை!
நடிகர் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவர் திரையுலகில் அறிமுகமான அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. தற்போது, அதே தேதியில் சரியாக அரை நூற்றாண்டுக்கு பிறகு அவர் நடித்த ‘கூலி’ படம் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், வசூலில் பல முக்கிய சாதனைகள் செய்து சாதித்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் ஏற்படுத்தியுள்ள இன்னொரு சாதனை, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.கோலிவுட் சினிமாவின் வரலாற்றில் இன்று வரை எல்லாம் அதிகபட்சமாக பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்த திரைப்படம் ‘2.0’ என்றால் அது மிகை அல்ல. இயக்குநர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து உருவாக்கிய இந்த மாமொத்த படைப்பு, 2018 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியானது.நவீன தொழில்நுட்பம், பிரம்மாண்டமான காணொளிக் காட்சிகள் மற்றும் அத்துடன் ரஜினியின் அதிரடியான நடிப்பு என பல அம்சங்களை ஒருங்கிணைத்த இப்படம், உலகம் முழுவதும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சாதனை, தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் முக்கியமான இடத்தை பிடித்தது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், எந்த ஒரு தமிழ்ப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் போனது, ‘2.0’ படத்தின் பிரமாண்டத்தை உணர்த்துகிறது.தமிழ் சினிமாவின் வரலாற்றில் இன்று வரை உச்ச நிலை வசூலை பெற்ற படம் என்பதோடு, தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான அனுபவத்தை வழங்கிய திரைப்படமாகவும் ‘2.0’ பெருமையுடன் நிற்கிறது.2023ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மாஸ் மற்றும் ஆக்ஷன் சினிமாவாக உருவாகியதால், உலகளவில் ரூ.620 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், தமிழ் சினிமாவின் இரண்டாவது அதிகபட்ச வசூல் சாதனையை ரஜினிகாந்த் படைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் அதிக வசூலீட்டிய படங்களுக்கான முதல் 2 இடங்களை ரஜினி தக்க வைத்துள்ளார். 3-வது இடத்தில் விஜயின் ‘லியோ’ படம் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லியோ’ ரூ.605 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியானது. ஆமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாயிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த பிரமாண்ட படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்தது, மேலும் அனிருத் இசையமைத்தார்.’கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் முன்னேறி தற்போது உலகளவில் ரூ.500 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், ரஜினிகாந்த் கோலிவுட்டில் ரூ.500 கோடி வசூல் செய்த மூன்று படங்களைக் கொண்ட ஒரே நடிகராக உயர்ந்துள்ளார்.இத்துடன் ஒப்பிடுகையில், ஷாருக்கானுக்கு ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரூ.500 கோடியை கடந்துள்ளன, விஜய்க்கு ‘லியோ’ ஒன்று மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.அந்த வகையில் ‘2.0’, ‘ஜெயிலர்’, ‘கூலி’ ஆகிய 3 ரஜினி படங்களும் தலா ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன. கமர்ஷியல் நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரஜினியின் 50-வது திரைப்பயணத்துக்கு ரசிகர்கள் கொடுத்த அன்பளிப்பு தான் இந்த ரூ.500 கோடி க்ளப் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.