இலங்கை
ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விசாரிக்கப்படுவர்!
ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விசாரிக்கப்படுவர்!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி
ஆயுதக் குழுக்களுடன் தொடர்பைப் பேணிய அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புக் காரணமாகவே கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்கள் வளர்ச்சியடைந்தன. தமது இருப்புக்காகவும், வருமானத்துக்காகவும், அதிகாரங்களுக்காகவும் பல அரசியல்வாதிகள் ஆயுதக்குழுக்களைப் பயன்படுத்திவந்தனர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆயுதக்குழுக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
எனினும், ஆயுதக்குழுக்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் இடையில் தற்போதும் தொடர்புகள் உள்ளன. இதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெறும் சில குற்றச் செயல்களின் பின்னணியில் அரசியற் தொடர்புள்ளமையை அறிந்துள்ளோம். இந்த விடயம் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளுக்கு அமைய முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன – என்றார்.