இலங்கை
எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்பட்டால் மாகாணசபைத் தேர்தல் 3 ஆண்டுகள் தாமதமாகும்
எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்பட்டால் மாகாணசபைத் தேர்தல் 3 ஆண்டுகள் தாமதமாகும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தெரிவிப்பு
எல்லை நிர்ணய ஆணைக்குழு மீண்டும் நியமிக்கப்படும் பட்சத்தில் மாகாணசபைத் தேர்தல் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பிற்போகும் நிலை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் பவ்ரல் அமைப்பு நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. அந்தக் கலந்துரையாடலில் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு, எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டால், அது தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையாகவே அமையும். ஏனெனில், தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் அந்த ஆணைக்குழுவை நீதிமன்றத்தில் நிச்சயம் சவாலுக்கு உட்படுத்துவார்கள். 2017ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு சில தந்திரமான நடவடிக்கைகளால் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட் டது. இதனை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை அப்போது எடுக்கவில்லை. அது பெரும் தவறு. எல்லை நிர்ணயக்குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நடத்தமுடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தைக் காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. அரசியல்வாதிகளால் இடம்பெறும் ஊழல் மோசடிகளைத் தடுக்கமுடியும். அரச அதிகாரிகள், ஆளுநர்களால் இடம்பெறும் ஊழல் மோசடிகளை எவராலும் தடுக்க முடியாது – என்றார்.