பொழுதுபோக்கு
திரையில் கணவரை விற்றவர்; நிஜத்தில் அண்ணனுடன் திருமணம்: இந்த தமிழ் நடிகை யார்னு தெரியுமா?
திரையில் கணவரை விற்றவர்; நிஜத்தில் அண்ணனுடன் திருமணம்: இந்த தமிழ் நடிகை யார்னு தெரியுமா?
தமிழகத்தில் பிறந்து பாலிவுட் வரை சென்று, முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ஒருவர், ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர், திரையில் தம்பியின் மனைவியாக கணவரை விற்கும் பெண்ணாக நடித்து, பின்னாளில், கணவராக நடித்தவரின் அண்ணனையே திருமணம் செய்துகொண்டார். அந்த நடிகை யார் தெரியுமா?பாலிவுட்டில் கடந்த 1997-ல் வெளியான ‘ஜுடாய்’ திரைப்படம், பாலிவுட்டில் நிலவி வந்த வழக்கமான சினிமாக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக அமைந்தது. ஒரு மனைவி தனது கணவரைப் பணத்திற்காக இன்னொரு பெண்ணுக்கு விற்கும் ஒரு செயல்தான் இந்த படத்தின் கதை இந்திய சினிமா ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. இந்த துணிச்சலான கதைக்களம், ரசிகர்களைக் கவர்ந்ததோடு, இந்தப் படத்தின் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.80 -90களில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, ‘ஜுடாய்’ படத்தில் கஜல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பணத்தின் மீது அதீத ஆசை கொண்ட ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணாக அவர் தனது கேரக்டரை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார். தனது கணவரை (அனில் கபூர்) பணத்திற்காக இன்னொரு பெண்ணுக்கு விற்கும் அவரது கேரக்டர், நேர்மறைப் கேரக்டாகளில் இருந்து விலகி ஒரு வில்லி கேரக்டராக அமைந்தது. ஸ்ரீதேவியின் நடிப்பு, துணிச்சலாகவும் அதே சமயம் நுணுக்கமாகவும் இருந்தது. அவரது நகைச்சுவை உணர்வும், வலுவான திரைப் பிரசன்னமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.’ஜுடாய்’ திரைப்படம் ஸ்ரீதேவியின் படமாக இருந்தாலும், அதில் ஜான்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஊர்மிளா மடோண்ட்கரின் நடிப்பு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுவரை கவர்ச்சியான கேரக்டர்களில் மட்டுமே அறியப்பட்ட ஊர்மிளா, இந்த படத்தில் அமைதியான, எளிமையான மற்றும் உணர்வுபூர்வமான ஒரு பாத்திரத்தில் நடித்தார். கஜலின் கணவரை திருமணம் செய்துகொள்ளும் ஜான்வி கேரக்டரின் அப்பாவித்தனத்தையும், ஆழமான உணர்வுகளையும் அவர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினார்.அனில் கபூருடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்தது. ஸ்ரீதேவியின் தீவிரமான கேரக்டருக்கு நேர்மாறாக, ஊர்மிளாவின் மென்மையான நடிப்பு பல காட்சிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ‘ஜுடாய்’ திரைப்படம், வெறுமனே ஒரு குடும்ப நாடகம் அல்ல. அது பேராசை, உறவுகளின் சிக்கல் மற்றும் விதியின் விளையாட்டு ஆகியவற்றைப் பற்றிய ஒரு வலுவான கதையாக இருந்தது. கதை ஒரு பேராசையின் பயணமாகத் தொடங்கினாலும், அது இறுதியில் தியாகம், உண்மை உணர்தல் மற்றும் மனமாற்றம் ஆகியவற்றைப் பற்றியதாக மாறியது.இரண்டு வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி நடிகைகள், ஒரே திரையில் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது, பாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு அரிய தருணத்தைக் கொடுத்தது. ஸ்ரீதேவி தனது வலுவான நடிப்பால் மிரட்ட, ஊர்மிளா தனது அமைதியான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். இந்த படம் பாலிவுட்டில் ஒரு பெரிய புரட்சி படமாக இருந்து வரும் நிலையில், இன்றுவரை பாராட்டுக்களை பெற்று வரும் ஒரு படமாக நிலைத்திருக்கிறது.தெலுங்கில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான சுபலக்னம் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ஜூடாய். தெலுங்கில் ஜெகபதிபாபு, அமானி, ரோஜா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் இரட்டை ரோஜா என்ற பெயரில், ராம்கி, ஊர்வசி, குஷ்பு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் ஊர்வசி நடித்த கேரக்டரில் தான் இந்தியில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். மேலும் ஜூடாய் படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அனில் கபூர் உண்மையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.