இலங்கை
மாணவர்களின் மனநிலைக்கு வீட்டுத்தோட்டங்களே ஒத்தடம்!
மாணவர்களின் மனநிலைக்கு வீட்டுத்தோட்டங்களே ஒத்தடம்!
ஐங்கரநேசன் எடுத்துரைப்பு
மாணவர்களின் மனோநிலையில் ஆரோக்கியமான மாற்றங்களை வீட்டுத்தோட்டங்கள் உண்டுபண்ணும், வீட்டுத்தோட்டங்கள் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஒத்தடங்களைத் தருகின்றன என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டு அவர்களை வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விதைகளில் முளைவிடுவது தொடங்கி, நாற்றாக நிமிர்ந்து, செடிகொடியாக உயர்ந்து பூத்துக் காய்க்கின்ற ஒவ்வொரு பருவமும் அவற்றை அவதானிக்கும் மாணவர்களின் மனோநிலையில் ஆரோக்கியமான மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. பாடசாலைகளில் பயிர்த்தோட்டங்கள் அமைப்பதற்குக் கல்வியமைச்சும், அரசசார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன. பெரும்பாலான பாடசாலைகளில் விவசாயத்தை ஒரு பாடமாகப் பயிலுகின்ற மாணவர்களே இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதேபோன்றே வீட்டுத்தோட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் விவசாயப் பாடம் கற்கின்ற மாணவர்களே அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். இது தவறாகும். பாடசாலைத் தோட்டமோ அல்லது வீட்டுத் தோட்டமோ எல்லா மாணவர்களும் பங்கேற்கவேண்டும். இவை விவசாயப் பாடம் கற்கின்ற மாணவர்களுக்கானது என்ற மனோநிலை மாறவேண்டும்.
வீடுகளில் மாணவர்கள் கற்கும்போது நேர அட்டவணை போட்டு அதன்படிதான் படிக்கவேண்டும் எனப் பெற்றோர் வற்புறுத்துவது கூடப் பிழையானது என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவை ஏற்படுத்தும் மனஅழுத்தங்களிலிருந்து விடுபடும் ஒரு வழியாகவே மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்கிறார்கள். வீட்டுத்தோட்டங்கள் தேவையான மரக்கறி வகைகளைக் குறைந்த செலவில் தருவனவோ அல்லது நஞ்சற்ற உணவைத் தருவனவோ மாத்திரமல்ல. வீட்டுத்தோட்டங்கள் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஒத்தடங்களைத் தருகின்றன என்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டு அவர்களை வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என்றார்.