பொழுதுபோக்கு
வட சென்னை மலையாள வெர்ஷனா இந்த வெப் தொடர்? கவனம் ஈர்க்கும் ‘தி க்ரோனிக்கல்ஸ் ஆஃப் தி 4.5 கேங்!
வட சென்னை மலையாள வெர்ஷனா இந்த வெப் தொடர்? கவனம் ஈர்க்கும் ‘தி க்ரோனிக்கல்ஸ் ஆஃப் தி 4.5 கேங்!
சினிமா துறையில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான படங்களை கொடுப்பதில், மலையாள சினிமாவுக்கு நிகர் அவர்கள் தான். ஒரு சிறிய சம்பவத்தை அடிப்படையாக வைத்து அதை முழுநீள திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக கொடுப்பதில், கைதேர்ந்த கலைஞர்கள் பலர் உள்ளனர். சினிமாவில் செய்த அதே வேலையை தற்போது வெப் தொடரிலும் செய்து அசத்தியுள்ளனர்.மலையாளத்தில் வெளியாகி பலரின் புருவங்களை உயர்த்திய படங்களாக இருக்கும், ‘ஆவாசவ்யூஹம்’ மற்றும் ‘புருஷ பிரேதம்’ போன்ற படங்களை இயக்கிய கிருஷ்நாந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வெப் தொடர் தான், ‘தி க்ரோனிக்கல்ஸ் ஆஃப் தி 4.5 கேங். ஒரு இளைஞர்கள் குழுவையும், அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த கேங்ஸ்டர் வெப் தொடர், காமெடி பாணியில் இயக்கப்பட்டுள்ளது.திருவாஞ்சிபுரத்தின் கோயில் திருவிழாவை நடத்த வேண்டும் என்ற கனவோடு திரியும் இளைஞர்கள், தங்கள் திட்டத்தை நிறைவேற்ற, அப்பகுதியில் உள்ள பால் மற்றும் பூ மார்க்கெட்டைக் கைப்பற்றி பணம் சம்பாதிக்க முயல்கின்றனர். இதனால், அவர்களுக்கு உள்ளூர் குற்றவாளியும் தாதாவுமான புரூஸ் லீயின் கோபத்திற்கு ஆளாகா நேரிடுகிறது. இதன் பிறகு கதை, பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்கிறது.இந்த வெப் சீரிஸின் முதல் எபிசோட், ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கிறது. தனது வாழ்க்கை வரலாற்றை எழுத ஒரு பிரபல எழுத்தாளரைச் சந்திக்க செல்லும் ஒரு தாதாவுடன் தொடங்கும் இந்த கதை, அங்கிருந்துதான் அரிக்கூட்டன் மற்றும் அவனது குற்ற உலகப் பயணத்தை நோக்கி செல்கிறது. புரூஸ் லீ, பேலக்குட்டன் போன்ற தாதாக்கள் முதல் அரிக்கூட்டனின் குழுவில் உள்ள காஞ்சி, அல்டாஃப், மணியன், மூங்கா மற்றும் அவனது தந்தை வரை பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன.இதில், அரிக்கூட்டன் கேரக்டரில் சஞ்சு சிவராம் சிறப்பாக நடித்துள்ளார். அவரது நடிப்பு, கதைக்கு வலு சேர்க்கிறது. சில முக்கிய கதாபாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கதாபாத்திரங்கள், குறிப்பாக தர்ஷா ராஜேந்திரன் மற்றும் தேசிய விருது பெற்ற ஜரின் ஷிஹாப் ஆகியோர் தங்கள் நடிப்பில் கவனத்தை ஈர்த்தாலும், அவர்களுக்குத் திரையில் குறைந்த நேரமே கிடைத்துள்ளது. பெண் கதாபாத்திரங்கள் முழுமையாக எழுதப்படவில்லை. அதேபோல், சில நேரங்களில் கதை, அதன் முக்கியப் பாதையிலிருந்து விலகிச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.தி க்ரோனிக்கல்ஸ் ஆஃப் தி 4.5 கேங்”கில் வரும் ஆண்களின் தன்மானம் மற்றும் ஆணவம், ஒரு மனிதனின் கற்பனையான ஆணவம் அவமதிக்கப்படுவதில் இருந்து தொடங்கி, இது ஒரு டார்க் காமெடி மற்றும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இந்த வெப் தொடர் கவனம் ஈர்க்கிறது. இந்தத் தொடரில் மலையாள சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் இல்லை, ஆனால் சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். சுதந்திரமான சினிமா வட்டாரத்தில் இருந்து வந்த இந்த நடிகர்களுக்கு பெரிய நட்சத்திரங்களாக மாறும் திறமை உள்ளது.இந்த வெப் தொடரின் சில காட்சிகள் நீளமாக இருப்பதும் ஒரு குறையாகத் தெரிகிறது. எனினும், ஒரு கும்பல் திருவிழா நடத்த முயற்சிக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் சவால்களையும், போராட்டங்களையும் யதார்த்தமாகப் படம்பிடித்துள்ளது. அதேபோல், ‘வட சென்னை’, ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’ அல்லது ‘சிட்டி ஆஃப் காட்’ படங்களுக்கு இணையான ஒரு படைப்பை மலையாள சினிமா தற்போது பெற்றுள்ளது என்று கூறலாம். மேலும், ஒட்டுமொத்தமாக, இது ஓணம் பண்டிகையின்போது பார்க்க வேண்டிய ஒரு நல்ல பொழுதுபோக்குத் தொடர்.