விளையாட்டு
வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்
வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்
புரோ கபடி லீக் தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறும் நிலையில், விசாகப்பட்டினத்தில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்.29) முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்த முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று இரவு 7:30 மணிக்கும் தொடங்கும் தொடக்கப் போட்டியில் தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 8:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. நேருக்கு நேர்: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ்புரோ கபடி தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில்,தமிழ் தலைவாஸ் 9 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 6 வெற்றிகளுடன் பின்தங்கி இருக்கிறது. 1 போட்டி சமநிலையில் முடிந்தது. சமீபத்திய ஃபார்மில், தமிழ் தலைவாஸ் அணி கடைசி 5 போட்டிகளிலும் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. சுவாரசியமாக, கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பவன் செஹ்ராவத், இந்த சீசன் தொடக்க ஆட்டத்தில் தனது முன்னாள் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸை வழிநடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.