பொழுதுபோக்கு
ஏ.வி.எம்-க்கு வாலி எழுதிய முதல் பாட்டு; நாகேஷூடன் ஆட்டம் போட்ட அவர் மனைவி: எந்த பாட்டு தெரியுமா?
ஏ.வி.எம்-க்கு வாலி எழுதிய முதல் பாட்டு; நாகேஷூடன் ஆட்டம் போட்ட அவர் மனைவி: எந்த பாட்டு தெரியுமா?
ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களில் ஏவி மெய்யப்ப செட்டியாரும் ஒருவர். அவரின் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஏராளமான ஹிட் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. சினிமாவை பற்றிய நுண்ணறிவு கொண்டவராகவும் ஏவிஎம் செட்டியார் இருந்து வந்துள்ளார்.அந்த காலத்தில் ஒரு படம் ஓடுமா ஓடாதா என்கிற சந்தேகம் இருந்தால், ஏவிஎம் செட்டியாரிடம் தான் திரையிட்டுக் காட்டுவார்களாம். அந்த அளவுக்கு தொழில் நுணுக்கங்களை கற்று வைத்திருந்தார் ஏவிஎம் செட்டியார். அதேபோல், அந்த காலகட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் பல்வேறு புதுமையான முயற்சிகளையும் செய்யத் தவறியதில்லை. அப்படி அவர்கள் புதுமைகளுடன் தொடங்கிய படம் தான் சர்வர் சுந்தரம். இதில் இரண்டு விதமான புது முயற்சியை எடுத்திருப்பார். ஒன்று அந்த காலகட்டத்தில் நம்பர் 1 காமெடியனாக வலம் வந்த நாகேஷை கதாநாயகனாக வைத்து இப்படத்தை எடுத்தது. இன்றைய காலகட்டத்தில் காமெடி நடிகர் சூரியை வெற்றிமாறன் கதாநாயகனாக மாற்றிக்காட்டியதை வியந்து பேசுகிறோம். அந்த ரிஸ்கை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அந்த காலத்திலேயே எடுத்திருக்கிறார். அதேபோல் சர்வர் சுந்தரம் படத்தில் அவர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி, ஒரு பாடல் எப்படி உருவாகிறது, சினிமா படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை திரையில் காட்டி இருந்தார். இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து சர்வர் சுந்தரம் பட பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. 1960களில் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் பிரபலமாக இருந்த போது வாலி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தார். இருப்பினும், ஏவிஎம் நிறுவனம் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. பின்னர், தெய்வத்தாய் படத்துக்காக வாலி எழுதிய பாடல்களை கேட்டு, ஏவிஎம் மெய்யப்பா செட்டியார் மனமுகந்தார். பாடல்களின் தரம் அவரை மிகவும் கவர, யார் எழுதியது என்று கேட்டு வாலியின் பெயர் தெரிந்தபின், தனது சர்வர் சுந்தரம் படத்துக்கு வாலியை கவிஞராக நியமித்தார்.மெய்யப்பா செட்டியார், வாலியை சர்வர் சுந்தரம் படத்துக்காக பாடல் எழுத வைக்க முடிவு செய்ததை எம். எஸ். விஸ்வநாதனிடம் தெரிவித்தார். ஆனால் அதே நாளில் காலை வாலி ஏற்கனவே எம்.எஸ்.விக்கு வேறு ஒரு படத்துக்காக பாடல் எழுதியிருந்தார். பிற்பகலில் வேலை கேட்ட வாலிக்கு, “ஏவிஎம் படம் தான் இருக்கு, அதுக்கு வேறு கவிஞர்கள் எழுதுவாங்க” என எம்.எஸ்.வி கூற, வாலி வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் தான் மெய்யப்பா செட்டியார் வாலிக்கு வாய்ப்பு தரும் தீர்மானம் எம்.எஸ்.விக்குத் தெரிந்தது.இறுதியாக இசையமைப்பாளர் கோவர்தனம் என்பவரை அனுப்பி வாலியை அழைத்து வர சொல்லி இருக்கிறார் மெய்யப்ப செட்டியார். கோவர்தனம் அங்கு சென்றதும் வாலியை சந்தித்து விஷயத்தை விளக்கி சொல்ல, வாலி எப்படி குடிபோதையில் பாடல் எழுதுவது என யோசிக்கிறார்.பின்னர் வாலி குளித்து ஆடை மாற்றிக் கொண்டு ஏவிஎம் செட்டியாரின் முன்னிலையில் பாடல் எழுத அமர்கிறார். படம் குறித்து விளக்கியபோது, நாகேஷை ஹீரோவாக தேர்ந்தெடுத்ததற்கான எதிர்மறை விமர்சனங்களையும் கூறுகிறார்கள். ஹீரோ–ஹீரோயின் பாடல் காட்சிக்கு தேவையான பாடலை எழுதும்போது, வாலி ஹீரோயின் அழகைப் புகழ்ந்து “அவளுக்கென்ன அழகிய முகம்” என வரிகளை எழுதியுள்ளார்.