பொழுதுபோக்கு
தலையில் வழுக்கை, கருப்பு கண்ணாடி, உங்க படத்தை வரைய முடியாது; கலைஞரிடம் சொன்ன சிவகுமார்: க்ளாசிக் ஃப்ளாஷ்பேக்!
தலையில் வழுக்கை, கருப்பு கண்ணாடி, உங்க படத்தை வரைய முடியாது; கலைஞரிடம் சொன்ன சிவகுமார்: க்ளாசிக் ஃப்ளாஷ்பேக்!
பொதுவாக நடிகர்கள் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கான ஆயுதமாகவே ரசிகர் மன்றங்களை, வைத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் மத்தியில், தான் செயலாக இருந்த நேரத்திலும் ‘ரசிகர் மன்றம் தேவையில்லை’ என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தவர் சிவகுமார்.1965, ஜூன் 19, அன்று தான் ஏவி.எம்-ன் ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் ஓவியம் படித்த இளைஞன், திரைப்பட நடிகனாக, சிவகுமார் அறிமுகமானார். இதற்கு முன்னர் சென்னையில் ஒரு சிறிய அறை எடுத்து தங்கி, ஏழு ஆண்டுகள் ஓவிய கல்லூரியில் ஓவியராக இருந்துள்ளார்.சினிமாத் துறை என்றாலே, தனிமனித ஒழுக்கம் என்பது சீர்குலைந்து ‘நடிகர்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள்’ என்பது பொதுப்புத்தியில் படிந்து போயிருக்கும் சூழலில், ஒரு சினிமா நடிகர் மிக ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் ஆரோக்கியமாகவும் தன் உடலையும் மனதையும் பேண முடியும் என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறார் சிவகுமார். தன்னைப் போலவே தன் வாரிசு நடிகர்களையும் மிக ஒழுக்கத்துடன் வளர்த்திருக்கிறார் என்பது சிவகுமாரின் பெருமை மிகு அடையாளங்களுள் ஒன்று.தெலுங்கு பட உலகில் கிருஷ்ணர், ராமர் என்றால் என்.டி. ராமராவ் அவர்கள் நினைவுக்கு வருவார். தமிழ் நாட்டில் முருகன் என்றாலும் கிருஷ்ணன் என்றாலும் சிவகுமார் அவர்கள் மட்டுமே நினைவில் வருவார். அதுவும் கந்தன் கருணை படத்தில், முருகன் வேடத்தில் சிவகுமார் அவ்வளவு அழகாக இருப்பார். அவருக்கு பிறகு, முருகன் வேடம் வேறு யாருக்கும் இப்போது வரை பொருந்தவில்லை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.அருட்செல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் ஏ.பி. நாகராஜன் அவர்களின் கந்தன் கருணை தொடங்கி ஸ்ரீகிருஷ்ணலீலை வரை கிட்டத்தட்ட 12 படங்களில் நடித்துள்ளார் சிவகுமார் அவர்கள். ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் காரைக்கால் அம்மையார் படத்தில் கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலில் சிவநடனம் ஆடிய பாக்கியம் கதாநாயகர்களில் சிவகுமார் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த பிறவிபயன். இவர் நடித்த அன்னக்கிளி படத்தில் தான் முதன்முதலில் இசைஞானி இளையராஜா அவர்கள் அறிமுகம் ஆனார் என்பது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.நடிப்பு என்று வருகிற போது சிவகுமாரின் ஒரே மாதிரியான நடிப்பை ‘சலிப்பானது’ என்றுதான் பொதுவாக சொல்ல முடியும். ஆனால், தேர்ந்த இயக்குநரிடம் சென்று சேரும் போது இவரின் நடிப்பு பிரகாசிக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் ‘சிந்து பைரவி’. இதைப் போலவே மணிவண்ணன் இயக்கிய ‘இனியொரு சுதந்திரம்’, சேதுமாதவன் இயக்கத்தில் ‘மறுபக்கம்’, நூறாவது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார் சிவகுமார்.1979, மே மாத 26ம் தேதி அன்று தனது 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. 14 வயதுவரை 14 திரைப்படங்களே பார்த்த சிறுவன் கதாநாயகனாகி 14 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்து முடித்தார். முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயம் கொடுத்து சிவகுமார் தனது தாயார் ஆசியுடன் ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யைத் தொடங்கிவைத்தார்.இவர் சமீபத்தில் ஓவியத்தின் மீது அவரது ஆர்வத்தை பற்றி பேசுகையில், “நான் 6 ஆண்டுகள் ஓவிய கல்லூரியில் படித்து கோல்ட் மெடல் பெற்று வெளியே வந்தேன். இந்த மாதிரி ஓவியங்களை வெளிநாட்டு காரர்கள் வாங்கி கொண்டு செல்வார்கள். நான் பிறந்த ஊரில் கரண்ட், டாய்லெட் என்று எந்த விதமான சவுகரியமும் கிடையாது. இந்த ஓவியம் அனைத்துமே நானே கற்றுக்கொண்டு செய்தது தான்.” என்று கூறினார். நடிகர் சிவகுமார் சிறந்த ஓவியக் கலைஞராகவும், சிறு வயதில் சினிமா நடிகர்களின் உருவங்களை ஓவியமாக வரைந்து அஞ்சலில் அனுப்பி, அவர்களை வலம் வந்தார். 1958-ஆம் ஆண்டு, 16-வது வயதில் சிவாஜி கணேசனை சந்தித்து, அவர் நடித்த “உத்தமபுத்திரன்” படத்தில் பார்த்திபன், விக்ரமன் வேடங்களை ஓவியமாக வரைந்து, சிவாஜியிடம் ஒப்புதல் பெற்றார். அதன்பின், சிவாஜி, சிவகுமார் பின்வரும் ஓவியக் கல்லூரி பயணத்திற்கு பதிலாக, அவரை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் சேரச் சொல்லி, திரை உலகில் தொழில்முனைவோராக முன்னேற்றம் செய்ய ஊக்குவித்தார்.சிவாஜி சொன்னபடி, சிவகுமார் மோகன் ஆர்ட்ஸில் சேர்ந்தார். அங்கு பெரும் பேனர்கள், கட்-அவுட்கள் வரைவதை கண்டு, ஓவிய நுட்பங்களை கற்றுக்கொண்டார். ஆனால், பேனர் ஆர்டிஸ்டாக உழைப்பது கடினம் மற்றும் குறைந்த ஊதியம் என்பது புரிந்த சிவகுமார், 10 மாத பயிற்சிக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி ஓவிய கல்லூரி சேர்ந்தார். பின்னர், திரைப்படத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, வெள்ளித்திரையில் நட்சத்திரமாக உயர்ந்தார்.”நான் பெரியாரின் படத்தை ஒரு முறை வரைத்தேன். அதை வரைந்த பிறகு அதை எடுத்து கொண்டு கலைஞரிடம் காண்பித்தேன். அவர் அப்போது அதெல்லாம் வரைத்துவிட்டாய், என்னை எப்போது வரைவாய் என்று கேட்டார். நான் உங்கள் படத்தை வரைய முடியாது. உங்கள் தலை வழுக்கை, கருப்பு கண்ணாடி போட்டு இருக்கிறீர்கள் என்று கூறினேன். ஏன் என்றால் நான் பார்த்து வளர்ந்த கலைஞர் வழுக்கை இல்லை என்று கூறினேன். பிறகு பழைய படம் ஒன்றை தேடி எடுத்து வரைந்து கொடுத்தேன். அது இப்போது அவரது வீட்டில் உள்ளது.” என்று கூறினார்.