இந்தியா
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: புதுச்சேரி நகரில் போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: புதுச்சேரி நகரில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி நாளை நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் (வடக்கு-கிழக்கு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு சாரம் அவ்வை திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, எஸ்.வி.படேல் சாலைகள் வழியாக கடற்கரை சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே கடலில் கரைக்கப்படுகிறது.இதையொட்டி நாளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சில தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து மாற்றம்அதன்படி காலாப்பட்டு இ.சி.ஆர். சாலை மார்க்கமாக புதுச்சேரி புதிய பஸ் நிலையம் வரும் பஸ்கள், அனைத்து கனரக, இலகுரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து சிவாஜி சிலை நோக்கி சென்று கொக்கு பார்க், ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை, நெல்லித்தோப்பு வழியாக புதுச்சேரி பஸ் நிலையம் செல்ல வேண்டும்.இதேபோல் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புஸ்சி வீதி – ஆம்பூர் சாலை முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு மற்றும் சென்னை செல்ல வேண்டிய பஸ்கள், கனரக, இலகுரக வாகனங்கள் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெங்கட்டாசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் இடதுபக்கம் திரும்பி மறைமலை அடிகள் சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம் வழியாக காலாப்பட்டு வழியாக சென்னை செல்ல வேண்டும்.நகரப்பகுதிகாமராஜர் சாலையில் லெனின் வீதியில் இருந்து ராஜா தியேட்டர் வரை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலம் நேரு வீதியை கடக்கும் வரை, அண்ணா சாலையில் மதியம் 3 மணி முதல் அனைத்து வகையான வாகனங்களும் செல்ல முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. மேற்படி வாகனங்கள் அனைத்தும் அண்ணாசாலை, 45 அடி சாலை மற்றும் ஒதியஞ்சாலை சந்திப்புகளில் திருப்பி விடப்படும்.விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நேரு வீதி, காந்தி வீதி மற்றும் எஸ்.வி. பட்டேல் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரை சாலையில் இருந்து கடலில் இறங்குவதற்காக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி