வணிகம்
இ.பி.எஃப்.ஓ-வில் அதிரடி மாற்றம்: இனி ஒரு மாதம் பணிபுரிந்தாலும் ஓய்வூதியம் கிடைக்கும்!
இ.பி.எஃப்.ஓ-வில் அதிரடி மாற்றம்: இனி ஒரு மாதம் பணிபுரிந்தாலும் ஓய்வூதியம் கிடைக்கும்!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதியின்படி இனி ஒருமாதம்கூட பணிபுரிந்து, இ.பி.எஸ் திட்டத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்களும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த மாற்றம், முன்பு ஓய்வூதியப் பலனைப் பெற முடியாத லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.பழைய விதிமுறை என்ன?முந்தைய விதிமுறையின்படி, ஒரு ஊழியர் 6 மாதங்களுக்கும் குறைவாகப் பணிபுரிந்து வேலையை விட்டு விலகினால், அவரது பணிக்காலம் ‘பூஜ்ஜியம் முழுமையான ஆண்டு’ (Zero Complete Year) எனக் கருதப்பட்டது. இதனால், ஓய்வூதியத்திற்காக அவர்கள் செலுத்திய இபிஎஸ் பங்களிப்பு செல்லாததாகிவிடும், அவர்களுக்கு பிஎஃப் பணம் மட்டுமே கிடைக்கும். இதன் காரணமாக, அவர்களின் இபிஎஸ் பங்களிப்பு வீணானது.ஆனால், 2024 ஏப்ரல்-மே மாதங்களில் EPFO வெளியிட்ட சுற்றறிக்கையில், ஊழியர் ஒரு மாதம் மட்டுமே பணிபுரிந்து, EPS திட்டத்தில் பங்களிப்பு செய்திருந்தாலும், அவரும் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த மாற்றம், குறைந்த காலத்திற்குப் பணிபுரிபவர்கள் அல்லது அடிக்கடி வேலை மாறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.புதிய மாற்றத்தால் யாருக்குப் பயன்?இந்த மாற்றத்தால் பிபிஓ, logistics, டெலிவரி ஊழியர், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் எனப் பலரும் பயனடைவார்கள். இனி, அவர்களது இபிஎஸ் பங்களிப்பு வீணாகாது. மேலும், அவர்கள் ஓய்வூதியம் பெறவும் தகுதியடைவார்கள். இந்த நடவடிக்கை இளைஞர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும். வேலை மாறும் சமயங்களில் அவர்களுக்கு ஒருவித மன நிம்மதியையும் அளிக்கும்.பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ்புக்கில் உள்ள இபிஎஸ் பங்களிப்பைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஓய்வூதியப் பகுதி சேர்க்கப்படாமல் இருந்தால், இபிஎஃப்ஓ-வில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்க, பாஸ்புக்கின் ஸ்கிரீன்ஷாட் அல்லது PDF தேவைப்படும்.இந்தியாவில் தற்காலிக மற்றும் ஒப்பந்த வேலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த மாற்றம் அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அடிக்கடி வேலை மாறுவது என்பது இந்தத் துறைகளில் சாதாரணமாக நடக்கும் ஒன்று. முன்பு, அத்தகைய ஊழியர்களின் EPS பங்களிப்பு அங்கீகரிக்கப்படாததால், அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த புதிய விதி, அந்த சிக்கலை நீக்கி, கோடிக்கணக்கான ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும்.