இலங்கை

யாழ். செம்மணி விவகாரம்; சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல்

Published

on

யாழ். செம்மணி விவகாரம்; சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல்

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைவரும் அணி திரள வேண்டுமென தென்னிந்திய பிரபல இயக்குநர் வ.கௌதமன் அறைகூவல் விடுத்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதியை நிலைபாட்டுவதற்கான, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியை தோண்ட தோண்ட தினமும் விதவிதமான கொடூரங்கள் அங்கே அரங்கேறி காட்சி அளிக்கின்றன.

நேற்று முன்தினமும் சிறியதொரு மனித எலும்புத் தொகுதி ஒன்று பெரிய மனித எலும்புத் தொகுதியை அணைக்கும் விதத்தில் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

இது தாயினதும் சேயினதுமாகவே இருக்கக்கூடும்.

யுத்தத்தில் ஈடுபடாத தரப்பினரும் இங்கே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பல்வேறு வகையில் நிரூபணமாகிறது.

அதிலும் மழலைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பது மனித குலம் மன்னிக்க முடியாத ஆகப்பெரிய கொடூரம்.

Advertisement

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இதுநாள் வரை எவ்வளவோ கொடூரமான காட்சிகளை பார்த்துவிட்டோம்.

இன்னமும் தோண்ட தோண்ட என்னென்ன அவலங்களை, கொடூரங்களை எல்லாம் காண வேண்டி இருக்குமோ என நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

எமக்கே இப்படி இருக்கும்போது இழந்த உறவுகளுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது.

Advertisement

இது இவ்வாறு இருக்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் செம்மணி மனிதப் புதை குழிக்கும், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் காணப்படுகின்ற ஏனைய மனிதப் புதைகுழிகளுக்கும்,

வன்னி பெருநிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கும், இனப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது என்பது வேடிக்கையான விடயம்.

அழித்தவர்களிடமே நீதியை கேட்டால் அவர்கள் வழங்குவார்களா என்ன?

Advertisement

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஐ. நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாண சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கும் நேரில் சென்று அங்கே நிலைமைகளை பார்வையிட்டார்.

பின்னர் அது குறித்த மனித புதைகுழி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்கையில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள ஏனைய பகுதிகளை ஸ்கான் நடவடிக்கை செய்வதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

Advertisement

இருப்பினும் பாதுகாப்பு அமைச்சகம் அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை.

இந்நிலையில் ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று ஸ்கேன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அந்த கருவி துல்லியத்தன்மை குறைந்ததாகவே காணப்படுகின்றது. தற்போது அதனை விடவும் நவீனத்துவம் வாய்ந்த கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன.

Advertisement

அந்தக் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதி வசதி இல்லாவிட்டால் அதனை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூட தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இது இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசாங்கம் ஏன் அந்த உதவிகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறது?

Advertisement

நீதியின்படியும் இல்லாமல் அறத்தின் படியும் நில்லாமல் இருக்கும் இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை மூலம் இவர்கள் தீர்வு வழங்குவார்கள் என எந்த வகையில் நம்புவது? பாதிக்கப்பட்ட மக்களே உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை திணிப்பது தவறானது.

எம்மக்கள் விரும்புகின்றது போல சர்வதேச விசாரணை மூலமே இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வினை வழங்க முடியும்.

எனவே சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு இனிமேலும் தாமதிக்காது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், தமிழர் தலைவர்களும் ஓரணியில் திரள வேண்டும் என உரிமையோடு தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version