இலங்கை
இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!
இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!
இந்தியாவுக்கான மறைமுக எச்சரிக்கையா?
கச்சைதீவு தொடர்பில் தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமாலை கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சி நிரலில் இல்லாத, திடீர்ப் பயணமாக இது அமைந்தது.
தமிழகத்தில் எதிர்வரும் வருடத்தின் இரண்டாவது காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது பிரதான தேர்தல் பரப்புரைக்களமாக கச்சதீவைப் பயன்படுத்தி வருகின்றன. கச்சதீவை இலங்கையில் இருந்து மீட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதாகவே பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஜனாதிபதி அநுர கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர். ‘கச்சதீவு இலங்கைக்குரியது. அதை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை. இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திரிகள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழகத் தலைவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே அநுரவின் நேற்றைய பயணம் அமைந்திருந்ததாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.