பொழுதுபோக்கு
நீயா நானா ஷோ சர்ச்சை… டாக் லவ்வர்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; கொந்தளித்து வீடியோ போட்ட பிரபலங்கள்!
நீயா நானா ஷோ சர்ச்சை… டாக் லவ்வர்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; கொந்தளித்து வீடியோ போட்ட பிரபலங்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற விவாத நிகழ்ச்சி ‘நீயா நானா’, சமூகத்தில் அதிகம் பேசப்படும் பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து விவாதிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில், “தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் – தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது” என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கடும் விவாதப் பொருளாக மாறியது. உணர்ச்சிபூர்வமான கருத்துகளும், கடுமையான வாதங்களும் நிறைந்த இந்த நிகழ்ச்சி, அதன் பின் நிகழ்ந்த சில சர்ச்சைகளாலும், பிரபலங்களின் விளக்கங்களாலும் இன்னும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.இந்த விவாதத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய சீரியல் நடிகை அம்மு ராமசந்திரன், தனது கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, ட்ரோல் செய்யப்பட்டதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தான் நாய்களை “குழந்தைகள் போல” வளர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், விலங்குகள் மீது நாம் காட்டும் அன்பு மனிதநேயத்தின் ஒரு பகுதி என வாதிட்டார். இருப்பினும், எதிர் தரப்பில் இருந்த ஒருவர் “நாய்களைக் குழந்தைகள் என்று சொல்லாதீர்கள், இது அனுதாபம் தேடும் முயற்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.நடிகை அம்மு தனது விளக்க வீடியோவில், “எட்டு மணி நேரம் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி, வெறும் 45 நிமிடங்களாகத் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைவிட, எதிர்தரப்பினருக்கே அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எங்கெல்லாம் பிரச்சனை நடந்ததோ, அவர்களைத் தேர்வு செய்து பேச வைத்த கோபிநாத் (நிகழ்ச்சியின் தொகுப்பாளர்), எங்கள் தரப்பு நியாயங்களைக் காது கொடுத்து கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி இருதரப்பையும் மோத விட்டு அழகு பார்க்க நினைத்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)அதேபோல், இந்த விவாதத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் படவா கோபியும் சர்ச்சையில் சிக்கினார். “இரவு 9 மணிக்கு மேல் தெருவுக்கு வந்தால் நாய் கடிக்கத்தான் செய்யும்” என்று அவர் பேசிய கருத்து, சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவரும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “இப்படி எடிட் செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. விவாதம் என்றால் வரமாட்டேன் என நான் ஆரம்பத்திலேயே மறுத்தேன். ஆனால், வெறும் கருத்தைச் சொன்னால் போதும் என்று சொல்லிதான் என்னை அழைத்தார்கள்” என்று கூறியுள்ளார்.படவா கோபி மேலும், “நான் பேசியது ஒரு சினிமா போல எடிட் செய்யப்பட்டு, எனக்கு எதிரான கருத்துகளை மட்டுமே ஒளிபரப்பியுள்ளனர். நான் நாய்களின் குணாதிசயங்கள் குறித்துப் பேசியதைக் கூட, தவறாகப் புரிந்துகொண்டு அனைவரும் ட்ரோல் செய்கிறார்கள்” என்றார். நிகழ்ச்சியின் முழுமையான, எடிட் செய்யப்படாத வீடியோவை வெளியிட்டால் உண்மை தெரியவரும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தன்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.A post shared by Badava Gopi Actor (@badavagopi)