இலங்கை
அரசியற் குப்பைக்குள் வீசப்படுவார் பொன்சேகா!
அரசியற் குப்பைக்குள் வீசப்படுவார் பொன்சேகா!
முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரைவில் அரசியற் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விமர்சித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் விரிவாக விசாரிக்கப்படவேண்டும். அந்த ஊழல் மோசடிகளுக்காக 400 வருடங்கள் மஹிந்தவுக்குச் சிறைத் தண்டனை விதித்தாலும் தவறில்லை என்று பொன்சேகா விமர்சித்திருந்தார். அத்துடன், பிரபாகரன் தப்பிச்செல்லவே மஹிந்த போர் நிறுத்தம் செய்தார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்தே, மஹிந்த ராஜபக்ச மீது உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைப் பேசிவரும் பொன்சேகா மக்களால் விரைவில் அரசியற் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
‘இந்த நாட்டையார் பாதுகாத்தது என்ற உண்மை நாட்டு மக்களுக்குத் தெரியும். இராணுவத்தில் இருந்த பிரதானிகளுக்கும் தெரியும். எனவே, தமது அரசியல் தேவைக்காக அறிவிப்புகளை விடுக்கும் நபர்கள் தொடர்பில் கருத்தில் எடுக்கத் தேவையில்லை என்று சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.