உலகம்
8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!
8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!
இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் பயணித்த ஹெலிக்கொப்டர் மாயமான நிலையில், அந்நாட்டு இராணுவம் தீவிர தேடுதலை மேற்கொண்டு வருகின்றது.
தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் இந்தோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான குறித்த ஹெலிக்கொப்டர், கலிமந்தன் மாகாணத்திற்குப் புறப்பட்டது. ஹெலிக்கொப்டரில் இந்தியர் ஒருவர், அமெரிக்கர், பிரேசிலியர் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். புறப்பட்ட 8 நிமிடங்களிலேயே ஹெலிக்கொப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, மண்டேவே பகுதியில் உள்ள 27 கிலோமீற்றர் தொலைவுள்ள போர்னியோ வனப்பகுதியில் ஹெலிக்கொப்டரை இந்தோனேசிய இராணுவத்தினர் மற்றும் உள்ளூர் பொலிஸார் இணைந்து தேடி வருகின்றனர்.
இந்தோனேசிய வானிலை, புவியியல் மற்றும் புவி இயற்பியல் முகமை, தென் கலிமந்தன் மற்றும் மத்திய கலிமந்தன் மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த திடீர் வானிலை மாற்றம் ஹெலிக்கொப்டர் மாயமானதற்கு காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.