இந்தியா
பாலியல் வன்கொடுமை செய்தவர் வீட்டுக்கே அனுப்பட்ட ம.பி சிறுமி: குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் மீது வழக்கு
பாலியல் வன்கொடுமை செய்தவர் வீட்டுக்கே அனுப்பட்ட ம.பி சிறுமி: குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் மீது வழக்கு
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சிறுமியை டெல்லிக்கு கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லியை அடைவதற்குள் குர்கான் காவல்துறையினரால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா நகர் போலீசார் அந்த நபர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் மார்ச் வரை பெண்களுக்கான நல மையமான ஒன் ஸ்டாப் சென்டரில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், குழந்தைகள் நல கமிட்டி பாதிக்கப்பட்ட சிறுமியை குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரின் மைத்துனியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் அவருடன் தொடர்புடையவர். இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அப்போதுதான் இரண்டாவது முறையை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு திருப்பி அனுப்பி, இரண்டாவது முறையாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு குழந்தைகள் நலக் குழுவின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தர்பூர் குழந்தைகள் நலக் குழு தலைவர், ஐந்து குழு உறுப்பினர்கள், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி, ஒன் ஸ்டாப் சென்டர் நிர்வாகி, ஒரு ஆலோசகர், ஒரு வழக்குரைஞர் மற்றும் மற்றொரு பெண் உள்ளிட்டோர் மீது பல்வேறு சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்தர்பூர் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 29 அன்று ஒன் ஸ்டாப் சென்டரில் நடந்த ஆலோசனை அமர்வின் போது பாதிக்கப்பட்ட சிறுமி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. “மாவட்ட திட்ட அதிகாரி மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் ஊழியர்கள் வழக்கை அடக்க முயன்றதாகக் கூறப்படுவது விசாரணையில் தெரியவந்தது. தவறான முடிவுகளை எடுத்து விஷயத்தை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.