வணிகம்
ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி: இனி உணவு விலை உயருமா?
ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி: இனி உணவு விலை உயருமா?
அவசர உலகில், பட்டினியைக் கண்டாலே பதறுபவர்கள் நாம். பசிக்கு உணவு, அதுவும் உடனடியாக என்றால், நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்தான் முதல் கடவுளாகத் தெரிகிறது. ஒரு சில கிளிக்குகளில், பிடித்தமான உணவை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கும் மேஜிக் வித்தை, சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) போன்ற ஆப்களில் உள்ளது. ஆனால், இந்த மேஜிக் இனி சற்று விலை உயர்ந்ததாக மாறப்போகிறது.ஆம், சமீபத்தில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் க்விக் காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்கட் (Blinkit), ஜெப்டோ (Zepto) போன்ற டெலிவரி சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் இந்த புதிய வரி அமலுக்கு வரவிருக்கிறது. இந்த முடிவால், நுகர்வோரின் தலையில்தான் இந்த கூடுதல் சுமை விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.எங்கே வருகிறது இந்த கூடுதல் கட்டணம்?நீங்கள் ஒரு உணவை ஆர்டர் செய்யும்போது, இரண்டு முக்கிய கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன:உணவுக்கான கட்டணம் (Restaurant Services): இதற்கு ஏற்கெனவே 5% ஜிஎஸ்டி உண்டு.டெலிவரி கட்டணம் (Delivery Services): இதுவரை, இந்த கட்டணத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாமல், ஒருவிதமான சட்டபூர்வமான சர்ச்சையிலேயே இருந்துவந்தது.இப்போது, ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய அறிவிப்பின்படி, டெலிவரி கட்டணத்திற்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதன் விளைவாக, நீங்கள் ஒரு ஆர்டருக்கு செலுத்தும் மொத்தத் தொகையில், இந்த இரு கட்டணங்களும் சேர்ந்து கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதாவது, உணவுக்கு 5% ஜிஎஸ்டி + டெலிவரி கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி என இரட்டை வரி இனி நமது பில்லில் இருக்கும்.ஏன் இந்த திடீர் மாற்றம்?கடந்த சில ஆண்டுகளாகவே, டெலிவரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கும், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் இடையே சட்டரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன.நிறுவனங்களின் வாதம்: “நாங்கள் டெலிவரி சேவையை வழங்குவதில்லை. டெலிவரி பார்ட்னர்கள்தான் அந்த சேவையைச் செய்கிறார்கள். நாங்கள் வாடிக்கையாளரிடமிருந்து அந்த கட்டணத்தை டெலிவரி பார்ட்னர்களுக்காக வசூலித்துத் தருகிறோம். எனவே, அதற்கு நாங்கள் ஜிஎஸ்டி செலுத்த முடியாது” என நிறுவனங்கள் வாதிட்டு வந்தன. உதாரணமாக, 2023 டிசம்பரில், சொமேட்டோவுக்கு ரூ.401.7 கோடி ஜிஎஸ்டி செலுத்தக்கோரி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சொமேட்டோ இந்த வாதத்தை முன்வைத்து பதிலளித்திருந்தது.ஜிஎஸ்டி கவுன்சிலின் வாதம்: ஆன்லைன் மூலமாக உணவு விநியோகிப்பது என்பது ஒரே சேவையாக (composite supply) கருதப்பட வேண்டும் என்று சில மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில், உணவை விநியோகிக்கும் நிறுவனங்கள், பல்வேறு பொருட்களையும் (குயிக் காமர்ஸ்) விநியோகிப்பதால், டெலிவரிக்கு ஒரு பொதுவான வரி விதிப்பைக் கொண்டுவர முடிவு செய்தது.இதுவரை இந்த சேவை, ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 9(5)-இன் கீழ் ஒரு தெளிவற்ற பகுதியாகவே இருந்தது. இப்போது, கவுன்சிலின் பரிந்துரையின்படி, டெலிவரி சேவைக்கும் இந்த சட்டப் பிரிவின் கீழ் வரி விதிப்பு விதிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவால், டெலிவரி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கும் மேலாக கூடுதல் செலவு ஏற்படும் என ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்த இழப்பை ஈடுகட்ட, நிறுவனங்களுக்கு ஒரே வழி, அந்தச் சுமையை நுகர்வோர் மீது சுமத்துவதுதான்.டெலிவரி கட்டணம் உயர்வு:உணவு விலையேற்றம்: நிறுவனங்கள், டெலிவரி பார்ட்னர்களின் வருவாயைக் குறைப்பதன் மூலமோ அல்லது உணவின் விலையை அதிகரிப்பதன் மூலமோ இந்த இழப்பை சரிசெய்ய முயற்சிக்கலாம்.ஆனால், இந்த வரி விதிப்பு அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், அங்கு டெலிவரி என்பது பொருளுக்கான சேவையின் ஒரு பகுதி, தனிப்பட்ட சேவையல்ல.இனி, பசி வந்ததும், உங்கள் விருப்பமான பிரியாணியை ஆர்டர் செய்வதற்கு முன்பு, “டெலிவரி கட்டணமும் விலை அதிகமாகும்” என்பதை ஒரு நிமிடம் நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை, பக்கத்தில் இருக்கும் கடைக்கு நீங்களே நடந்து சென்று வாங்கி வரலாம், அது பணத்தையும், நேரத்தையும், ஆரோக்கியத்தையும் ஒரு சேர மிச்சப்படுத்தும். என்ன, யோசிக்கிறீர்களா?இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.