இந்தியா
சந்திர கிரகணம்: புதுவையில் தொலைநோக்கி மூலம் இலவசமாக பார்க்க ஏற்பாடு; சிறப்பு பரிகார பூஜைகள்
சந்திர கிரகணம்: புதுவையில் தொலைநோக்கி மூலம் இலவசமாக பார்க்க ஏற்பாடு; சிறப்பு பரிகார பூஜைகள்
புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், பொதுமக்கள் சந்திர கிரகணத்தை தொலைநோக்கிகள் மூலம் இலவசமாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானியல் ஆர்வலர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.இன்று இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 11.43 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நடை சாத்தப்பட உள்ளது. கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் இரவு 7 மணி முதல் நடை சாத்தப்படும். அதற்கு முன், மாலை 5.30 மணிக்கு பௌர்ணமி அபிஷேகம் நடைபெறும்.மணக்குள விநாயர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன், அரியாங்குப்பம் திரவுபதியம்மன், தவளக்குப்பம் முத்தாலம்மன், பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன், அபிஷேகப்பாக்கம் போத்தியம்மன், நோணாங்குப்பம் மன்னாதீஸ்வரர் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களும் மூடப்பட உள்ளன.திருபுவனை தென்கலை வரதராஜ பெருமாள், திருவண்டார் கோவில் பஞ்சநதீஸ்வரர் சிவன், சன்னியாசிகுப்பம் சப்தரிஷிகள் மாதா, வராகி அம்மன், காளி கோவில், மதகடிப்பட்டு குழி மகாதேவர் மற்றும் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி கோவில் ஆகிய கோவில்களும் மாலை முதல் மூடப்படும். கிரகணம் முடிந்ததும், நாளை (திங்கட்கிழமை) காலை முதல் அனைத்து கோவில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னரே கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என கோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி