இந்தியா
புதுச்சேரி ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பு: சட்ட நடவடிக்கை பாயும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
புதுச்சேரி ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பு: சட்ட நடவடிக்கை பாயும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரீஸ்வரர் – ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை உடனடியாக காலி செய்து, ஒப்படைக்குமாறு ஆலய நிர்வாக அதிகாரி சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தியாகு முதலியார் வீதியில் பழைய எண்.30-இல் உள்ள இடம், ஸ்ரீ வேதபுரீஸ்வரர் – ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் ஆலயத்தின் அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக ‘சன் பேக்கரி’ என்ற பெயரில் கடை அமைத்து, அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக கடையை காலி செய்து, இடத்தை தேவஸ்தானத்தில் ஒப்படைக்குமாறு ‘சன் பேக்கரி’ நிறுவனத்துக்கு ஆலய நிர்வாக அதிகாரி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.