வணிகம்

அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் உயரும்; அடித்துச் சொல்லும் ஆனந்த் சீனிவாசன்

Published

on

அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் உயரும்; அடித்துச் சொல்லும் ஆனந்த் சீனிவாசன்

தங்கம்… வெறும் உலோகம் மட்டுமல்ல, அது ஒரு நம்பிக்கை, ஒரு முதலீடு, ஒரு உணர்ச்சி! திருமணங்கள், பண்டிகைகள், பிறந்தநாள் என நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தங்கம் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. ஆனால், சமீபகாலமாக தங்கத்தின் விலை எட்டியிருக்கும் உயரமானது, பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறது, அதே சமயம் பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், ஒரு சவரன் தங்கத்தின் விலை 80,000 ரூபாயைத் தாண்டி, புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.உலக அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், டாலரின் மதிப்பு சரிவு, மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்க கொள்முதல் என பல காரணிகள் தங்கத்தின் விலையை விண்ணை நோக்கி உயர்த்தியுள்ளன. குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், தங்கள் கையிருப்பை பன்முகப்படுத்த, தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இது தங்கத்தின் தேவையை அதிகரிப்பதோடு, அதன் விலையையும் உயர்த்துகிறது.இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால், சாமானிய மக்களுக்கு இது ஒரு பேரிடி. குறிப்பாக, திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தங்கம் ஒரு அவசர முதலீடாக பார்க்கப்பட்டாலும், அதன் விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்தியை வெகுவாகப் பாதிக்கிறது.எதிர்காலம் எப்படி இருக்கும்?தங்கத்தின் விலை உயர்வு இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஏற்படும் வரை, தங்கத்தின் மீதான முதலீடு குறையாது. மேலும், இந்தியப் பண்டிகைகள் மற்றும் திருமண சீசன்களின் போது, தங்கத்தின் தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். எனவே, தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனும் இதை ஒப்புக் கொள்கிறார். மணிப்பேச்சு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டார். ”பெரும்பாலான மத்திய வங்கிகள் வாங்குகின்றன, ஆனால் சில வங்கிகள் வாங்குவதில்லை. ரஷ்யா மற்றும் சீனா தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்கின்றன. மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் விற்கும் தங்கத்தை இந்த நாடுகள் வாங்கி வருகின்றன.வரும் மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை உயரும், குறுகிய காலத்தில் ஏற்படும் சரிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதால், பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், இது தங்கத்தின் விலையை மேலும் அதிகரிக்கும்” என்கிறார் ஆனந்த் சீனிவாசன். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version