வணிகம்
ஏ.டி.எம். ரகசியம்: ‘கேன்சல்’ பட்டனை இரண்டு முறை அழுத்தினால் என்ன ஆகும்?
ஏ.டி.எம். ரகசியம்: ‘கேன்சல்’ பட்டனை இரண்டு முறை அழுத்தினால் என்ன ஆகும்?
இணையத்தில் பரவி வந்த ஒரு செய்தி, பலரின் நம்பிக்கையாக மாறியிருக்கிறது. ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கு முன் இரண்டு முறை ’கேன்சல்’ (Cancel) பட்டனை அழுத்தினால், உங்கள் பின் திருட்டு போவது தடுக்கப்படும் என்பதுதான் அது. இது பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தத் தகவல் எவ்வளவு தூரம் உண்மை? இந்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB)வின் உண்மை கண்டறியும் குழு, இந்தத் தகவலை ஆராய்ந்தது. அவர்களின் அறிக்கையின்படி, இரண்டு முறை ’கேன்சல்’ பட்டனை அழுத்துவதால் உங்கள் பின்னுக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் கிடைக்காது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்படி ஒரு முறையைச் செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தவில்லை.’கேன்சல்’ பட்டனின் உண்மையான வேலை என்ன?நீங்கள் ஒரு பரிவர்த்தனையை (transaction) தொடங்கும் போது, அதை பாதியிலேயே நிறுத்த விரும்பினால், அதற்காகவே இந்த பட்டன் உள்ளது. இது பரிவர்த்தனையை ரத்து செய்ய உதவுகிறது. அவ்வளவுதான். இதன் மூலம் ரகசிய பின் திருட்டைத் தடுக்க முடியாது.பின் திருட்டு பெரும்பாலும் ஏடிஎம்-மில் பொருத்தப்பட்ட ஸ்கிம்மர்கள் (skimmers), மறைந்திருக்கும் கேமராக்கள் அல்லது அருகில் நின்று கவனிப்பவர்கள் மூலமாகவே நடக்கிறது. எனவே, வெறும் ‘Cancel’ பட்டனை அழுத்துவது எந்த வகையிலும் பயன் தராது. உங்கள் பணத்திற்கும் தகவலுக்கும் பாதுகாப்பு வேண்டுமென்றால், வேறு சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.பாதுகாப்பான ஏடிஎம் பரிவர்த்தனைக்கு சில முக்கிய குறிப்புகள்ஏடிஎம் பயன்படுத்தும்போது, ரகசிய எண்ணை உள்ளிடும்போது கீபேடை கைகளால் மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஸ்கிம்மர்கள் போன்ற சந்தேகத்திற்குரிய சாதனங்கள் ஏதேனும் உள்ளதா என இயந்திரத்தை கவனமாகப் பரிசோதிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் உள்ள, செயல்படும் திரை கொண்ட ஏடிஎம்களைப் பயன்படுத்த வேண்டும்.பரிவர்த்தனைகள் குறித்து உடனடி அறிவிப்புகளைப் பெற, எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை (SMS alerts) எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்தால், உடனடியாக வங்கியில் தெரிவிக்க வேண்டும்.ஏடிஎம் மோசடிகளைத் தடுக்க விழிப்புணர்வு மிகவும் முக்கியம். ரகசிய எண்ணை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கூட ஒருபோதும் பகிரக்கூடாது. ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரகசிய எண்ணை மாற்ற வேண்டும். ‘1234’ அல்லது பிறந்த தேதி போன்ற எளிமையான ரகசிய எண்களைத் தவிர்ப்பது அவசியம். ஏடிஎம் இயந்திரத்தில் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சிக்கிக்கொண்டால், உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.இந்த வழிமுறைகள் திருட்டிலிருந்து பயனுள்ள பாதுகாப்பை வழங்கும். விழிப்புணர்வும் எச்சரிக்கையுமே ஏடிஎம் மோசடிகளுக்கு எதிரான நம்பகமான பாதுகாப்புகள் ஆகும்.