தொழில்நுட்பம்
மக்கும் தன்மை, உறுதி, நீடித்த உழைப்பு.. பிளாஸ்டிக் இனி மக்கும்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!
மக்கும் தன்மை, உறுதி, நீடித்த உழைப்பு.. பிளாஸ்டிக் இனி மக்கும்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் பெரும்பாலானவை பெட்ரோலியத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை மட்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, விஞ்ஞானிகள் தொடர்ந்து மக்கும் பிளாஸ்டிக்கை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், அவை பெரும்பாலும் உறுதியாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருப்பது இல்லை.இந்நிலையை மாற்ற, ஜப்பானில் உள்ள கோபே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். உயிரிப் பொறியாளர் (bioengineer) சுட்டோமு டனாகா தலைமையிலான குழு, கடலுக்குள் வாழும் பாக்டீரியாவை (E. coli) பயன்படுத்தி ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். அவர்கள் இதற்கு பி.டி.சி.ஏ. (PDCA) என்று பெயரிட்டுள்ளனர்.இந்த பிளாஸ்டிக் எப்படி உருவானது?இந்த பிடிசிஏ பிளாஸ்டிக், குளுக்கோஸிலிருந்து நேரடியாக பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்தப் பிளாஸ்டிக்கில் நைட்ரஜன் இருப்பதால், இது உறுதியாகவும், பெட் (PET) பிளாஸ்டிக்கை விட வலிமையானதாகவும் இருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிளாஸ்டிக் தயாரிப்பின்போது எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்களும் உருவாவதில்லை.ஆராய்ச்சியின் போது, ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற நச்சு வேதிப்பொருள் உருவானது. இது பிளாஸ்டிக்கை உருவாக்கும் நொதியை (enzyme) சேதப்படுத்தியது. ஆனால், விஞ்ஞானிகள் ஒரு நடுநிலையாக்கும் பொருளைச் சேர்த்து, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டனர். இதனால் பாக்டீரியாக்கள் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்ய முடிந்தது.இந்தக் கண்டுபிடிப்பு பிளாஸ்டிக் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். எதிர்காலத்தில், பிளாஸ்டிக்கை மட்டுமல்லாமல், பல்வேறு பயனுள்ள பொருட்களையும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு, இந்த புதிய கண்டுபிடிப்பு, எதிர்கால பிளாஸ்டிக் பயன்பாட்டை மாற்றுவதுடன், பூமியை மேலும் பசுமையாக்க உதவும்.