இந்தியா
தரமான குடிநீர் வேண்டும்: புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க
தரமான குடிநீர் வேண்டும்: புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க
புதுச்சேரி, உருளையன்பேட்டை கோவிந்த சாலைப் பகுதியில் மாசு கலந்த குடிநீர் குடித்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் நெல்லிதோப்பு, உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடடையே, சுத்தமான குடிநீர் வழங்க கோரி உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதி மக்களை திரட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து தரையில் அமர்ந்து முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை கண்டித்தும், ராஜினாமா செய்யக் கோரியும் கோஷமிட்டனர். அப்போது திடீரென, தரமான குடிநீர் வழங்கக்கோரி தண்ணீர் பானைகளை உடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய தி.மு.க அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா பேசுகையில், “புதுச்சேரியில் ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் பிரச்னை இல்லை, எல்லா தொகுகளிலும் இதே பிரச்னை உள்ளது. ஆனால் அரசு இறுக்கமாக கண்ணை மூடிக்கொண்டுள்ளது. இந்த அலட்சிய போக்கு சரியானது அல்ல. அப்பாவி மக்கள் 3 உயிர்கள் பறிபோனதற்கு அரசு தான் முழு காரணம். என்ன பிரச்னை என மக்கள் கிட்ட போய் கேட்கனும், முதல்வர் அமைச்சர்கள் ஏ.சி அறையில் அமர்ந்த் கொண்டு மீட்டிங் போடுகிறார்கள். முதல்வர் வந்து பதிக்கப்பட்டவர்களை இதுவரை பார்த்தரா? 3 பேர் இதுவரை இறந்துள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சர், செயலர் எங்கே போனார்கள்?இவ்விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசு களம் இறங்க வேண்டும். மக்கள் பீதியில் உள்ளனர். அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். பழைய குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். எல்லா தண்ணீத் தொட்டியிலும் ஒரு அடி, அரை அடி சேறு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நல்ல தண்ணீர் கிடைக்கும் வரை அரசு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் தர வேண்டும். அசுத்தமான குடிநீர் குடித்து உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும். ஆனால், இப்படிதான் இருப்பீர்கள் என்றால் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.இன்னும் 500 ரெஸ்ட்டோ பார் கூட திறந்து கொள்ளுங்கள், மக்களுக்கு நல்ல தண்ணீரை கொடுங்கள். இந்த அரசுக்கு எச்சரிக்கையாக சொல்லி கொள்ள வேண்டியது என்னவென்றால், மக்களுக்கு வேண்டியதை செய்யாவிட்டால் அவர்கள் வரும் தேர்தலில் உங்களை காணாமல் போகச்செய்வார்கள்.” என்று அவர் கூறினார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.