இந்தியா

புதுவையில் பாரதிதாசன் மழலையர் பள்ளியில் நிர்வாகச் சீர்கேடு – தி.மு.க எம்.எல்.ஏ புகார்

Published

on

புதுவையில் பாரதிதாசன் மழலையர் பள்ளியில் நிர்வாகச் சீர்கேடு – தி.மு.க எம்.எல்.ஏ புகார்

இது தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ இரா.சிவா கல்வித்துறை இயக்குநருக்கு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இயங்கி வரும் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் வீட்டியல் மற்றும் உணவியல் (Home Science Department) துறையின் கீழ் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. புதுச்சேரியில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டிய இந்த மழலையர் பள்ளி அதிகார சீர்கேட்டால் பல அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்டு இம்மழலையர் பள்ளி மூடு விழாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களின் கவலையை உறுதிப்படுத்தும் விதமாக 75 மழலையர்கள் படிக்கும் பள்ளியில் பணியாற்றிய 6 தற்காலிக ஊழியர்களில் துணை ஆசிரியர், சமையலர், பணியாளர் உள்ளிட்டோர் மூன்று பேரை கல்வித்துறை இயக்குநரகம் பணி நீக்கம் செய்துள்ளது.மேலும், 20 மழலையர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்த நிலை மாறி இன்று 75 மழலையர்களுக்கும் இரண்டு ஆசிரியர்களே கல்விகற்கும் நிலை உள்ளது. பற்றாக்குறை ஆசிரயர்களை தற்காலிகமாக நியமிக்க கல்வித்துறை மறுத்து வருவதன் காரணமாக மழலையர்களின் கற்றல் பணி தொய்வடைந்து உள்ளது. இதுமட்டுமல்லாமல், பணியாளர்கள் பற்றாக்குறையால் மழலையர்களுக்கு உணவு வழங்குதல், சுகாதார வசதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து பள்ளியின் தலைமை பேராசிரியர் மற்றும் முதல்வரிடம் புகார் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை என்றும் புகார் தெரிவிக்கும் பெற்றோர்களை கல்லூரி வளாகத்தில் அனுமதிக்க மறுத்து வெளியில் குழந்தைகளை இறக்கிவிட்டு செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டு அவர்கள் மூலம் குழந்தைகளை சாலையில் இறக்கிவிடும் அவலம் தொடர்வாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பெற்றோர்கள் அவசர நிலையை காரணம் காட்டி வழக்கம்போல் மழலையர்களை கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து சென்றால் அந்த பெற்றோரை காவலர்கள் சிறைபிடித்து அவர் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் நிலைக்கு கல்லூரி நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது. இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இதனிடையே கடந்த 1–ம் தேதி நிர்வாகம் சார்பில் பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை நடத்தி தற்காலிக ஆசிரியர் நியமிக்க முடியாது என்று கண்டிப்புடன் தெரிவித்து, பெற்றோர்களை மிரட்டும் தொனியில் மழலையர் பள்ளியை மூடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, முன்மாதிரியாக திகழும் மழலையர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள், பணியாளர்களை நியமித்து மழலையர்களின் கல்வி வளர்ச்சி மேம்பட கல்வித்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களை மிரட்டி சர்வாதிகார போக்கை கடைபிடித்த கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version