இந்தியா
இங்கிலாந்தில் இருந்து ஆந்திரா வரை – திருப்பதி பக்தர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் – தேவஸ்தானம் எச்சரிக்கை
இங்கிலாந்தில் இருந்து ஆந்திரா வரை – திருப்பதி பக்தர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் – தேவஸ்தானம் எச்சரிக்கை
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில், அல்லது திருப்பதி பாலாஜி கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி), மோசடிக்காரர்களால் வெளியிடப்படும் ஆன்லைன் விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:இந்த விளம்பரங்கள் ஹோட்டல் தங்குமிடங்கள், இலவச தரிசனங்கள், அல்லது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்யாணம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாக கூறுகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேவைகளின் பெயரில் போலி இணையதளங்கள் மூலம் பக்தர்கள் ஏமாற்றப்படுவது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேவஸ்தான வாரியம், வெளிநாடுகளில் இருந்தும் சில நபர்கள் மற்றும் அமைப்புகள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. டி.டி.டி அனுமதி அளிக்காத அல்லது அங்கீகரிக்காத நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ் அட்டைகள், டி.டி.டி லோகோவுடன் வந்திருப்பதை சமீபத்தில் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், திருப்பதியில் தங்குமிடம் மற்றும் இலவச தரிசனம் ஏற்பாடு செய்வதாக கூறி, தங்களை தேவஸ்தான ஊழியர்கள் என கூறிக்கொண்டு, பக்தர்களிடம் பணம் பெற்று ஏமாற்றுவது குறித்து பல புகார்களைப் பெற்றதாகவும் டி.டி.டி கூறியுள்ளது. பணம் பெற்ற பிறகு, அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டனர்.“சமீபத்தில், ஒரு அமைப்பு செப்டம்பர் 6-ம் தேதி இங்கிலாந்தில் ‘ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச கல்யாணமகோத்சவம்’ நடத்துவதாக கூறி, அழைப்பிதழ் அட்டை வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாக பரவியது. இந்த நிகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை அல்லது அதிகாரப்பூர்வ உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று டி.டி.டி தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தபோதிலும், ஏற்பாட்டாளர்கள் அழைப்பிதழ் அட்டையில் டி.டி.டி-யின் அதிகாரப்பூர்வ லோகோவை தவறாக பயன்படுத்தியுள்ளனர். டி.டி.டி-யின் பெயர் மற்றும் லோகோவை இத்தகைய அங்கீகரிக்கப்படாத பயன்பாடு, பக்தர்களை தவறாக வழிநடத்தி குழப்பத்தை உருவாக்குகிறது” என்று டி.டி.டி கூறியுள்ளது.அழைப்பிதழில் அந்த நிகழ்வு “இலவசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அழைப்பிதழில் அச்சிடப்பட்ட க்யூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்தபோது, பக்தர்கள் பதிவு செய்து “சேவை கட்டணங்களுக்காக” 566 யூரோ பணம் செலுத்தும்படி கேட்கப்பட்டது தெரியவந்தது. மேலும், டி.டி.டி கல்யாணம் லட்டு பிரசாதம், ஒரு வெள்ளி டாலர், அட்சதை, மஞ்சள், குங்குமம், சேலை, தாலிக்கயிறு, பிளவுஸ் பீஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஒரு பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் போன்ற பொருட்களை விநியோகிப்பதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.இதே போன்ற நிகழ்வுகள் சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டன.ஸ்ரீவாரி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ஏமாற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.டி.டி எச்சரித்துள்ளது. பல புகார்களில், ஒரு பக்தர் ஆன்லைனில் திருப்பதி அல்லது திருமலையில் தங்குமிடம் தேடும்போது, ஒரு இணையதளத்தைக் கண்டார். அந்த இணையதளத்தில் இருந்த தொலைபேசி எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது, ஒரு நபர் தன்னை தேவஸ்தானத்தின் வரவேற்பு அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி, தவறான தகவலை கொடுத்துள்ளார். அந்த அலுவலகம் பக்தர்களுக்கு தங்குமிடம் வழங்குகிறது.“அவர் தங்குமிடம் மற்றும் இலவச தரிசனம் வழங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து, பணம் செலுத்தப்பட்டால் பி.டி.எஃப் வடிவத்தில் தங்குமிட டிக்கெட்டை அனுப்புவதாக உறுதியளித்தார். பணம் பெற்ற பிறகு, அந்த நபர் அவரது தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார்” என்று டி.டி.டி கூறியுள்ளது.