தொழில்நுட்பம்
லைட், கேமரா, ஆக்சன் இல்ல; அல்காரிதம் தான்… ஏ.ஐ.-யால் உருவான முழு நீள அனிமேஷன் திரைப்படம்!
லைட், கேமரா, ஆக்சன் இல்ல; அல்காரிதம் தான்… ஏ.ஐ.-யால் உருவான முழு நீள அனிமேஷன் திரைப்படம்!
ஃபெலினி, ஸ்கோர்செஸி மற்றும் டேவிட் லின்ச் போன்ற ஜாம்பவான்கள் தங்கள் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை அறிமுகப்படுத்திய அதே அரங்குகளில், அடுத்தாண்டு புதிய வரலாறு எழுதப்படலாம். ஆம், முழுமையாக செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் மேடை ஏற உள்ளது. இது வெறும் புரளி அல்ல. ஃபிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழக்கமான தயாரிப்புகளை விட வேகமாகவும், மிகக் குறைந்த செலவிலும் உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க ஓபன் ஏ.ஐ (OpenAI) நிறுவனம் முழு நீள அனிமேஷன் திரைப்படத்திற்கு நிதியுதவி அளிப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அறிக்கை கூறுகிறது.இத்திரைப்படத்தின் பெயர் ‘Critterz’. அந்நிய நபர்களால் தொந்தரவுக்குள்ளாகும் காட்டு விலங்குகளை பற்றிய சாகச கதை இது. 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஓபன் ஏ.ஐ-யின் படைப்பாற்றல் நிபுணர் சாட் நெல்சன், தனது நிறுவனத்தின் DALL-E கருவியை பயன்படுத்தி கதாபாத்திரங்களை வரைய தொடங்கினார். அவரே 2023-ல் ஒரு குறும்படத்தையும் இதே பெயரில் உருவாக்கி வெற்றி கண்டார். “ஏ.ஐ. கருவிகள் என்ன செய்யும் என்பதை வாயால் சொல்வதை விட, படைப்பாக உருவாக்குவது அதிக தாக்கம் ஏற்படுத்தும்,” என்கிறார் சாட் நெல்சன்.லண்டனின் வெர்டிகோ ஃபிலிம்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் நேட்டிவ் ஃபாரின் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. மே 2026-ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் இதை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.தயாரிப்பில் என்னென்ன மாற்றங்கள்?வேகம்: இத்திரைப்படம் வெறும் 9 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஆகும் நேரத்துடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவு.செலவு: படத்தின் பட்ஜெட் $30 மில்லியனுக்கும் குறைவு. அதே சமயம், பிக்சரின் பிரபல திரைப்படமான ‘Inside Out 2’-ன் பட்ஜெட் $200 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.எப்படி உருவாகிறது?குரல் கொடுப்பதற்கு நடிகர்கள், வரைவதற்கு கலைஞர்கள் என மனிதர்களின் பங்களிப்பு இருக்கும். ஆனால், அவர்கள் உருவாக்கும் வடிவமைப்பு, கருத்துக்களும் ஏ.ஐ கருவிகளுக்கு உள்ளீடாக கொடுக்கப்படும். அதன் பிறகு, அனிமேஷன் மற்றும் காட்சிகளை உருவாக்கும் பொறுப்பை ஓபன் ஏ.ஐ.யின் ஏ.ஐ கருவிகள் எடுத்துக்கொள்ளும். ‘Paddington in Peru’ படக்குழுவினரின் பங்களிப்புடன் கதை எழுதப்பட்டுள்ளது. வெர்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபெடரேஷன் ஸ்டுடியோஸ் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கிறது.விவாதங்களும், சவால்களும்சினிமா உள்ளிட்ட பல துறைகள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த ஏ.ஐ-யை பயன்படுத்துகின்றன. ஆனால், கலைஞர்களின் படைப்புகளை ஏ.ஐ. திருடி பயன்படுத்திக் கொள்கிறது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது. 2023-ல், ஹாலிவுட் நடிகர்களும், எழுத்தாளர்களும் ஏ.ஐ-க்கு எதிராக பாதுகாப்புகேட்டு போராடினர். இருப்பினும், அதன் பிறகு பல படங்களில் ஏ.ஐ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘The Brutalist’ திரைப்படத்தில், நடிகர் ஆட்ரியன் பிரோடி பேசிய ஹங்கேரிய உச்சரிப்பை மேம்படுத்த ஏ.ஐ. உதவியது.இந்தியாவில் கூட ‘Raanjhanaa’ (2013) திரைப்படத்தின் சோகமான கிளைமாக்ஸை, ஏ.ஐ-யைக் கொண்டு மகிழ்ச்சியான முடிவாக மாற்றி ஈரோஸ் இன்டர்நேஷனல் ரீரிலீஸ் செய்தது. இது பல கலைஞர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றது. இதேபோல், டிஸ்னி, யுனிவர்சல், வார்னர் பிரதர்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்கள் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகக் கூறி, மிட்ஜர்னி போன்ற ஏ.ஐ. நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.