இந்தியா
மணிப்பூர் கலவரம்: பிரதமர் மோடியின் முதல் பயணம்; அமைதியை நிலைநாட்ட ரூ. 7,000 கோடி திட்டங்கள்
மணிப்பூர் கலவரம்: பிரதமர் மோடியின் முதல் பயணம்; அமைதியை நிலைநாட்ட ரூ. 7,000 கோடி திட்டங்கள்
மணிப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த இனக்கலவரத்தால் ஏற்பட்ட துயரங்களுக்கு மத்தியில், அமைதி மற்றும் வளர்ச்சிதான் ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூரில் பழங்குடி சமூகத்தினரிடையே சனிக்கிழமை உரையாற்றிய அவர், இயல்புநிலையை மீட்டெடுக்கவும், இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும், மலை மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய அரசின் தொடர் ஆதரவு இருக்கும் என்று உறுதியளித்தார்.“இந்த மணிப்பூர், நம்பிக்கை மற்றும் லட்சியங்களின் பூமி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வன்முறை இந்த அற்புதமான பகுதியை ஆட்கொண்டது,” என்று மோடி குறிப்பிட்டார். “சிறிது நேரத்திற்கு முன்பு முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். அவர்களுடன் பேசிய பிறகு, நம்பிக்கையின் புதிய விடியல் மணிப்பூரின் கதவுகளைத் தட்டுகிறது என்று என்னால் சொல்ல முடியும்.”சுராசந்த்பூர் மாவட்டத்தில், சுமார் ரூ. 7,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், எந்தவொரு இடத்திலும் வளர்ச்சிக்கு அமைதி அவசியமானது என்று வலியுறுத்தினார். “கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மக்கள் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.”மே 2023 முதல் மெய்தி மற்றும் குகி-சோ சமூகத்தினரிடையே நடந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். இந்த கலவரத்திற்குப் பிறகு பிரதமரின் முதல் வருகை இது. கலவரத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. “இடம்பெயர்ந்தவர்களுக்கு 7,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க அரசு உதவி செய்து வருகிறது. சமீபத்தில், ரூ. 3,000 கோடி சிறப்புத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். மேலும், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ரூ. 500 கோடி சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று பிரதமர் தெரிவித்தார்.சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் குறைவாக இருப்பதாக மலை மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எழுப்பி வந்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் புதிய திட்டங்களை பட்டியலிட்டார். “மலை மாவட்டங்கள் நல்ல மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை கனவு கண்டன. இன்று, சுராசந்த்பூரில் ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது. புதிய மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர். நாங்கள் மலைகளுக்கு மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளோம்,” என்றார்.பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மற்றும் சமூக வளர்ச்சிக்கு இணையாக, மாநிலத்திற்கான பெரிய உள்கட்டமைப்பு முதலீடுகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “நல்ல சாலைகள் இல்லாததால், மக்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். 2014-க்கு பிறகு, மணிப்பூரின் இணைப்பில் கவனம் செலுத்தினேன். தேசிய நெடுஞ்சாலைகளுக்காக ரூ. 3,700 கோடி செலவழித்துள்ளோம். மேலும் ரூ. 8,700 கோடி புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு செலவிடப்படுகிறது,” என்று தெரிவித்தார்.ரூ. 22,000 கோடி மதிப்பிலான ஜிரிபாம்-இம்பால் ரயில் பாதை, மாநில தலைநகரை தேசிய ரயில் வலையமைப்புடன் விரைவில் இணைக்கும். ரூ. 400 கோடி மதிப்பிலான இம்பால் விமான நிலைய நவீனமயமாக்கல், “விமான இணைப்பிற்கு புதிய உயரங்களைக் கொடுக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.பிரதமரின் முதன்மை நலத்திட்டங்கள் தொலைதூர பழங்குடி குடும்பங்களையும் கணிசமான அளவில் சென்றடைந்துள்ளன என்றும் மோடி தெரிவித்தார். “பிரதமரின் ஆவாஸ் யோஜனாவின் கீழ் இங்கு 60,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்போது, 1 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், 25-30,000 பேருக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது. இப்போது 3.5 லட்சம் குடும்பங்களுக்கு அது கிடைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.இறுதியாக, “மணிப்பூரின் வளர்ச்சிக்காக, இடம்பெயர்ந்தவர்களை மறுவாழ்வு செய்வதற்காக, அமைதியை நிலைநிறுத்துவதற்காக, மத்திய அரசு மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைக்கும்” என்று பிரதமர் உறுதியளித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்கை இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.