இந்தியா

உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு: 10 பேர் மாயம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

Published

on

உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு: 10 பேர் மாயம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

Chamoli Uttarakhand Cloudburst: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர். பலத்த இடிபாடுகள் பாய்ந்து வந்ததால் ஆறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட பகுதியை அடைந்துள்ளது.நேற்று (செப்டம்பர் 17) இரவு நந்தா நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இடிபாடுகளிலிருந்து 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவக் குழுவும் 3 ஆம்புலன்ஸ்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டுள்ளன. காணாமல் போன 10 பேரில், ஆறு பேர் குண்ட்ரி லகா பலி கிராமத்திலும், 2 பேர் சர்பானி கிராமத்திலும், மேலும் இருவர் துர்மா கிராமத்திலும் காணாமல் போனதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் மிக வயதானவரின் வயது 75, மிக இளையவர்கள் 10 வயதுடைய இரு சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன, மேலும் சமோலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து உள்ளூர் மக்கள் கூறிய தகவலின்படி, மேகவெடிப்பின் விளைவாக பல மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர். சரியாக நான்கு நாட்களுக்கு முன்பு, மாநிலத் தலைநகர் டேராடூனில் ஒரு மேகவெடிப்பு ஏற்பட்டது, இதில் குறைந்தது 13 பேர் இறந்தனர், மேலும் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இரண்டு பெரிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரத்தை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பல வழிகள் துண்டிக்கப்பட்டன.மேலும், செப்டம்பர் 20 வரை மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,  உயிரிழப்புகள், நிலச்சரிவுகள், மற்றும் உட்கட்டமைப்பு சரிவுகள் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரித்து, டேராடூன், சம்பாவத் மற்றும் உத்தம் சிங் நகருக்கு மாநில அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் 15 பேர் காணாமல் போயுள்ளனர், 900 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அத்தியாவசிய சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.சேதமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்து, சாலை மற்றும் மின் இணைப்புகளை விரைவில் மீட்டெடுப்பதே எங்கள் முயற்சி” என்று தாமி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. சேதமடைந்த மின் இணைப்புகளில் 85 சதவீதம் மீட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவையும் ஓரிரு நாட்களில் மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். உத்தரகண்ட் தவிர, இந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை பெய்ததால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மழையால் ஏற்பட்ட பேரிடர்களால் 3 பேர் இறந்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version