வணிகம்
ஜி.எஸ்.டி. சலுகை: செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் ரூ. 2 லட்சம் வரை விலையை குறைத்த ஸ்பின்னி
ஜி.எஸ்.டி. சலுகை: செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் ரூ. 2 லட்சம் வரை விலையை குறைத்த ஸ்பின்னி
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் இழப்பீட்டு செஸ் (compensation cess) நீக்கம், கார் வாங்குவோருக்கு ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், புதிய கார்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த வரிச் சலுகையை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன.எல்லோருக்கும் இனி ஒரு புது கார்!ஜிஎஸ்டி விகித மாற்றத்தால், சிறிய கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை அனைத்து பிரிவுகளிலும் விலை குறைந்துள்ளது.சிறிய கார்கள்: 4 மீட்டருக்குள், 1,200சிசி பெட்ரோல் அல்லது 1,500சிசி டீசல் எஞ்சின் கொண்ட கார்களுக்கு 28% ஆக இருந்த ஜிஎஸ்டி வரி, இப்போது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலை 5% முதல் 13% வரை குறையலாம். நடுத்தர வர்க்க மக்களின் கார் கனவை இது நிச்சயம் நிறைவேற்றும்.பெரிய கார்கள்: 4 மீட்டருக்கு மேல் உள்ள பெரிய கார்களுக்கு 28% ஜிஎஸ்டியுடன், கூடுதலாக 17% இழப்பீட்டு செஸ் விதிக்கப்பட்டு வந்தது. புதிய மாற்றத்தின்படி, செஸ் நீக்கப்பட்டதால் மொத்த வரி 40% ஆக குறைந்துள்ளது. இதனால் இந்த கார்களின் விலை 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளது.சொகுசு கார்கள்: மெர்சிடஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு பிராண்டுகளின் கார்களுக்கு முன்பு 50% (28% ஜிஎஸ்டி + 22% செஸ்) வரி விதிக்கப்பட்டது. இப்போது செஸ் நீக்கப்பட்டு, ஒரு பொதுவான 40% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதால், இந்த கார்களின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளன.பழைய கார்கள் விலையில் மாற்றம் இல்லையா?புதிய கார்களுக்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டாலும், பயன்படுத்தப்பட்ட அல்லது பழைய கார்களின் விலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக, பயன்படுத்திய கார்களுக்கு அவற்றின் வகை மற்றும் என்ஜின் திறனைப் பொறுத்து 12% அல்லது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதில் புதிய ஜிஎஸ்டி அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை.ஆனால், இந்தச் சூழலில், பயன்படுத்திய கார்களுக்கான இந்தியாவின் முன்னணி தளங்களில் ஒன்றான ஸ்பின்னி (Spinny), ஒரு முன்னோடி முடிவை எடுத்துள்ளது. புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் நிலையில், ஸ்பின்னி தனது பழைய கார்களின் விலையை இப்போதே குறைத்து அறிவித்துள்ளது.புரட்சிகரமான அறிவிப்பு!விலை குறைப்பு: ஸ்பின்னி தனது அனைத்துப் பழைய கார் சேகரிப்புகளிலும் விலையைக் குறைத்துள்ளது. பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம்.வெளிப்படைத்தன்மை: பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், வாங்குபவர்களுக்கு நியாயமான, வெளிப்படையான விலையை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டுள்ளதாக ஸ்பின்னி தெரிவித்துள்ளது.விற்பனையாளர்களுக்கு லாபம்: ஸ்பின்னி -ன் இந்த நடவடிக்கை, வாங்குபவர்களுக்கு மட்டுமன்றி, விற்பனையாளர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. அதிகரிக்கும் வாடிக்கையாளர் தேவை காரணமாக, பழைய கார்களுக்கு நல்ல மறுவிற்பனை மதிப்பு கிடைக்கிறது. விற்பனையாளர்களுக்கு ஒரு காருக்கு ரூ. 20,000 வரை கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.இந்தத் திடீர் விலை மாற்றங்கள், சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. “எங்கள் வாடிக்கையாளர்கள் தான் எங்களுக்கு எப்போதும் முதன்மையானவர்கள். விலையாக இருந்தாலும், தரமாக இருந்தாலும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே விலையை சரிசெய்து, வாடிக்கையாளர்கள் உடனடியாக நம்பிக்கையுடன் முடிவெடுக்க உதவுகிறோம்” என ஸ்பின்னி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹனிஷ் யாதவ் கூறியுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.