இந்தியா
புழலில் கால் சென்டர்… குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த கும்பல்; புதுச்சேரி போலீஸ் அதிரடி
புழலில் கால் சென்டர்… குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த கும்பல்; புதுச்சேரி போலீஸ் அதிரடி
ஆன்லைன், குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்பு வழியாக குறைந்த வட்டிக்கு பிரபல வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. ஆக்ஸிஸ், இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ., ஐ.டு,எஃப்,சி, பி.ஓ.ஐ., ஐ.ஓ.பி, பந்தன் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களான பஜாஜ், ஸ்ரீராம் மற்றும் இதர பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி தருவோம் என்று கூறி தமிழ்நாடு , புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான நபர்களிடம் கால் சென்டர் வைத்து இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு மேல் கொள்ளை அடித்த சென்னையை சேர்ந்த மோசடி கும்பலில் இரண்டு பெண் நிர்வாகிகளை கைது போலீசார் கைது செய்தனர்.திருக்கனூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ஹெச்.டி.எஃப்.சி வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, அவருக்கு லோன் தேவையா என்றும், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 14 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளார். சங்கர் லோன் வேண்டுமென்று கேட்டபோது, அவருடைய ஆதார் அட்டை, வங்கிப் புத்தகம், வேலை செய்யும் விவரங்கள் ஆகியவற்றை கேட்டு, ஒரு வாட்ஸ்அப் எண்ணை கொடுத்து, அதற்குத் அனைத்து ஆவணங்களையும் அனுப்புமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்தச் பெண் 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் வங்கி கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு முதலில் பிராசசிங் ஃபீஸ் ஐந்து ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறி ஜிபே எண்னை அனுப்பி 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். பல்வேறு வழிமுறைகள் மூலம் கடன் பெற, ஜி.எஸ்.டி வரி மற்றும் நேரடி வெரிஃபிகேஷன் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறி, தவணைத் தவணையாக 10 ஆயிரம், 15 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய்கள் என பணம் கட்டச் சொல்லி, மொத்தமாக 71 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று கொண்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர் உடனடியாக புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து, இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இணைய வழி காவல் கண்காணிப்பாளர் சுருதி வழிகாட்டுதலில் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் இணைய வழி கருவிகளின் உதவியோடு, குற்றவாளிகள் சென்னை புழல் அருகே இருப்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆய்வாளர் தியாகராஜன் மேற்பார்வையில், ஆய்வாளர் கீர்த்தி தலைமையில், வினோத் பாலாஜி, ராஜ்குமார், மற்றும் கமலி, மேரி, சுகன்யா அடங்கிய தனிப்படை போலீசார், சென்னை ரெட் ஹில்ஸ் மற்றும் புழல் பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதில் ‘நியூ கோல்டன் எண்டர்பிரைசஸ்’ (New Golden Enterprises) என்ற கால் சென்டர் நிறுவனத்தை சோதனை செய்தபோது அதன் உரிமையாளர் சசிகலா, பொற்செல்வி மற்றும் அந்தக் கால் சென்டரில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகின்றனர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு 42 சிம் கார்டுகள், 17 ஃபோன்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் கடந்த ஒரு வருடமாக அந்தக் கால் சென்டர் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் மூலம் இயங்கி வந்துள்ளதும் அங்கிருந்து சங்கரை தொடர்பு கொண்டு ஏமாற்றியது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்கள் எதிராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அதிக புகார்கள் பதிவாகி 2 கோடி 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்துள்ளதாக அறியப்படுகிறது. அந்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கப்பட்டு, பணிபுரியும் பெண்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.இது பற்றி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் கூறியதாவது: *நீங்கள்வாட்ஸ்அப்/ இன்ஸ்டாகிராம்/ ஃபேஸ்புக்/ டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தெரியாத நம்பர்களிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்தைப்பற்றி வரும் செய்திகளை நம்பவேண்டாம்.* சமூக வளதளங்களில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனை கொடுக்காதீர்கள், அப்படி கொடுத்து தவறான செயலில் உங்கள் வங்கி கணக்கு மற்றும் சிம்கார்டு ஈடுபட்டால் காவல் துறையினரால் கைது செய்ய நேரிடும்.மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி