வணிகம்
வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை: ஐரோப்பிய யூனியனுடன் இந்தியாவின் புதிய வியூகம்!
வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை: ஐரோப்பிய யூனியனுடன் இந்தியாவின் புதிய வியூகம்!
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவுடன் ஒரு புதிய தந்திரோபாய அணுகுமுறையை இந்தியா கையாளும் சூழ்நிலையில், ஐரோப்பிய யூனியன் (EU) இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில், ஒரு “புதிய வியூக செயல்திட்டத்தை” (New Strategic Agenda) அறிவித்துள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு முக்கிய துறைகளை இந்த செயல்திட்டம் உள்ளடக்கியுள்ளது.இந்தியாவுடன் புதிய அத்தியாயம்இந்தத் திட்டத்தை அறிவித்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், “இப்போது, பொதுவான நலன்கள் மற்றும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மைகளை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. எங்கள் புதிய வியூகத்தின் மூலம், இந்தியாவுடனான உறவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறோம்” என்று குறிப்பிட்டார். முன்னதாக, ஐரோப்பிய ஆணையமும், அதன் வெளியுறவு கொள்கையின் தலைமைத் தூதரான கையா கல்லாஸும் இணைந்து, இந்த ”புதிய வியூக ஐரோப்பிய யூனியன்-இந்தியா செயல்திட்டத்தை” ஒரு கூட்டு அறிக்கையாக வெளியிட்டனர்.இருப்பினும் இந்தியா ரஷ்யாவுடன் ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவதும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதும் நெருங்கிய உறவுக்குத் தடையாக இருப்பதாக கயா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை ஐரோப்பிய யூனியன் ஏற்கெனவே இந்தியாவிடம் பலமுறை எழுப்பியுள்ளது.தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்இந்தக் கூட்டு அறிக்கையில், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள், பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானவை என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. அதே சமயம், இந்த வருட இறுதிக்குள் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement) இறுதி செய்ய ஐரோப்பிய யூனியன் உறுதிபூண்டிருப்பதாக உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். “ஐரோப்பா ஏற்கெனவே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருக்கிறது. இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக அமையும்,” என்று அவர் கூறினார்.வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புஇந்த புதிய மூலோபாயம், வர்த்தகம் மற்றும் முதலீட்டில் உள்ள வாய்ப்புகளை அடையாளம் கண்டு, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த, குறிப்பாக சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க உத்திகளை வகுத்துள்ளது. இது விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தவும், முக்கியமான வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முன்மொழிகிறது.மேலும், இந்த மூலோபாய செயல்திட்டம், முன்மொழியப்பட்ட ஐரோப்பிய யூனியன்-இந்தியா பாதுகாப்பு கூட்டாண்மையையும் முன்னெடுத்துச் செல்கிறது. இது நெருக்கடி மேலாண்மை, கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் மூலோபாய ஆலோசனைகள் மற்றும் கூட்டு முயற்சிகளை மேம்படுத்தும். அத்துடன், பாதுகாப்புத் துறையில், உற்பத்தி, தொழில்நுட்பத் திறன்களை அதிகரிப்பது, விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பது மற்றும் புதுமைகளை உருவாக்குவது போன்றவற்றிலும் கவனம் செலுத்தும்.தலைவர்கள் கருத்துஇந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவு குறித்து, உர்சுலா வான் டெர் லேயன் தனது X பக்கத்தில், “எங்கள் புதிய ஐரோப்பிய யூனியன்-இந்தியா மூலோபாயத்தை தொடங்கிய அதே நாளில், பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதில் மகிழ்ச்சி. எங்கள் அடுத்த உச்சிமாநாட்டுக்காக மீண்டும் இந்தியா வர ஆவலுடன் உள்ளேன். ஒன்றாக, எங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்போம்,” என்று பதிவிட்டிருந்தார்.இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘புதிய மூலோபாய ஐரோப்பிய யூனியன்-இந்தியா செயல்திட்டம்’ குறித்து அறிந்து மகிழ்ச்சி. இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்தியா தயாராக உள்ளது. உக்ரைன் மோதலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வை எட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனி அறிக்கையில், இரு தலைவர்களும் “பரஸ்பர செழிப்புக்காகவும், உலகளாவிய பிரச்சினைகளை கூட்டாக எதிர்கொள்வதற்காகவும், நிலைத்தன்மையை வளர்ப்பதற்காகவும், விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரவேற்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பிரதமர் மோடி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் அடுத்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டுக்கு உர்சுலா வான் டெர் லேயனை அழைத்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. ஐரோப்பிய ஆணையத்தின் இந்தக் கூட்டு அறிக்கை, ஆணையத்தின் உறுப்பினர்கள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த சில மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.