விளையாட்டு

வெற்றி மேல் வெற்றி… ஆதிக்கம் செலுத்துமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் மோதல்

Published

on

வெற்றி மேல் வெற்றி… ஆதிக்கம் செலுத்துமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் மோதல்

12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடரில் நாளை வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெறும் 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் 3-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், விஜய் மாலிக் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் 8 போட்டிகளில் 3-ல் வெற்றி, 5-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சீசனை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றியை ருசித்தது. அதன்பிறகு 33-36 என யு மும்பை அணியிடமும், 28-37 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது. இந்த தோல்வியில் இருந்து மீள கடுமையாக போராடி பெங்கால் வாரியர்ஸ் அணியை 46-36 என்கிற கணக்கில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் 35-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. தற்போது, பதிலடி கொடுக்கும் வாரத்திற்கு தொடர் நகர்ந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் தெலுங்கு டைட்டன்சுடன் மல்லுக்கட்டுகிறது தமிழ் தலைவாஸ். இந்த தொடரில் அந்த அணியை முதல் 3 போட்டிகளில் வழிநடத்திய பவன் செஹ்ராவத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில், கடைசி 2 போட்டிகளில் அணியை அர்ஜுன் தேஷ்வால் வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணி வெற்றிகளை ருசித்து ஏறுமுகம் கண்டுள்ளது. இதே உத்வேகத்துடன் ஆடும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பை தமிழ் தலைவாஸ் உறுதி செய்யக்கூடும். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் இருந்து அணியைப் பார்க்கும் போது, ரைடிங் துறையில் சற்று பலவீனமாகவே தெரிகிறது. அர்ஜுன் தேஷ்வாலைத் தவிர புள்ளிகளை குவிக்க தரமான வீரர்களை அணி தேடி வருகிறது. பவன் செஹ்ராவத் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்த சூழலில் அவரது வெளியேற்றம் அணிக்கு சற்று பின்னடைவு போல் தெரிகிறது. ஆனாலும், நரேந்தர் கண்டோலா போன்ற அனுபவமிக்க வீரரை அவர்களின் அடுத்த ரைடராக வைத்திருக்கிறார்கள். அவர் சில புள்ளிகளை எடுத்தாலும், பல நேரங்களில் உள்ளே சென்று சிக்கிக் கொள்கிறார். மேலும், நரேந்தர் கண்டோலா டிஃபென்ஸில் சிறப்பாக செயலாற்றினாலும், சில சமயங்களில் அவசரப்படுகிறார். அதனைத் தவிர்க்கும் பட்சத்தில் அவர் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பானவராக இருப்பார். ஹிமான்ஷு, ரோனாக், சுரேஷ் ஜாதவ்  டிஃபென்ஸில் கலக்கி வருகிறார்கள். வெளியில் இருக்கும் அழுத்தத்தை சமாளித்து திறம்பட செயல்பாட்டால் அணி அதிக புள்ளிகளை பெற வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ் தலைவாஸ் அணியில் இருக்கும் மற்றொரு பெரிய பிரச்சனை செல்ஃப் அவுட் ஆகி வெளியேறுவது. அவர்களின் முந்தைய ஆட்டத்தில் மட்டும் 3 முறை செல்ஃப் அவுட் ஆகி வெளியேறினர். இதில் முன்னணி வீரரும் அணியின் கேப்டனுமான அர்ஜுன் தேஷ்வாலும் அடங்குவார். இதுபோன்ற சிறுசிறு தவறுகளை அவர்கள் களையும் பட்சத்தில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மறுபுறம், விஜய் மாலிக் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் 8 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளனர். இதில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் மட்டுமே 44 -34 என 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். மற்ற இரண்டு அணிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுக்கு எதிராக 37-32 என 5 புள்ளிகள் மற்றும் யு மும்பா-வுக்கு எதிராக 45 – 37 என 8 புள்ளிகள் என வென்றுள்ளனர். கடைசியாக அவர்கள் ஆடிய தபாங் டெல்லிக்கு எதிராக 33-29 என 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 2-ல் வெற்றி, 3-ல் தோல்வி கண்டுள்ளனர். அவை மூன்றும் தொடர் தோல்விகள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த தோல்விகளில் இருந்து மீளவும், தொடக்க ஆட்டத்தில் தங்கள் சொந்த ஊரில் மண்ணைக் கவ்வ வைத்த தமிழ் தலைவாஸுக்கு பதிலடி கொடுக்கவும் அவர்கள் தீவிரமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் கை ஓங்கி இருக்கும் நிலையில், அதனை சமாளித்து, பயிற்சியாளர் கிருஷ்ண குமார் ஹூடாவின் திட்டங்களுடன் வெற்றிப் பாதைக்கு திரும்ப தெலுங்கு டைட்டன்ஸ் நினைப்பார்கள். அதேநேரத்தில், அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்துள்ள தமிழ் தலைவாஸ் மீண்டும் வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version