வணிகம்
தீபாவளி ஷாப்பிங்கில் கவனம் தேவை: நோ-காஸ்ட் இ.எம்.ஐ.யின் 5 ஆபத்துகள்!
தீபாவளி ஷாப்பிங்கில் கவனம் தேவை: நோ-காஸ்ட் இ.எம்.ஐ.யின் 5 ஆபத்துகள்!
ஒவ்வோர் ஆண்டும் பண்டிகை காலம் நெருங்கும்போது, ஒருவித உற்சாகம் நம் மனதில் பற்றிக்கொள்ளும். கூடவே, வங்கிகள், சில்லறை விற்பனையாளர்கள், ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் என எல்லா இடங்களிலிருந்தும் ‘கவர்ச்சியான’ ஆபர்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கும். “வட்டி இல்லா இ.எம்.ஐ.”, “முன் பணம் தேவையில்லை”, “உடனடி கடன் ஒப்புதல்” என எல்லாம் நம் காதில் தேன் பாய்ச்சும். இவர்கள் பார்வையில் இது சரியே. பண்டிகை என்பது செலவழிப்பது. அந்த மனநிலையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் இந்தியாவுக்கு நிகர் இந்தியாதான். தீபாவளி, தசரா போன்ற திருவிழாக்களில் இந்த விற்பனை பிரம்மாண்டமாக நடக்கும்.ஆனால், நுகர்வோர்களாகிய நாம் எப்படி இவ்வளவு எளிதாகக் கடனில் விழுந்து விடுகிறோம் என்பதுதான் வேடிக்கை. விளம்பரங்கள் “கவலையின்றி கொண்டாடுங்கள்” என்று சொல்லும். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? பல குடும்பங்கள் அவர்களுக்குத் தேவைப்படாத பொருட்களுக்காக 12 மாதக் கடன்களில் கையெழுத்திடுகின்றன. ஒரு புதிய ஃபோனோ, பெரிய தொலைக்காட்சியோ வாங்கிய அந்த அக்டோபர் மாதம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அந்த இ.எம்.ஐ. ரசீது கொண்டாட்டம் முடிந்த பின்னும் ஒவ்வொரு மாதமும் நம்மைத் தேடி வரும். இந்தக் கட்டுரை இதைப் பற்றித்தான் பேசுகிறது: ஒரு பண்டிகை வாங்குதலின் மகிழ்ச்சி எப்படி நீண்ட கால கடனின் சுமையாக மாறுகிறது, மேலும் எளிதான இ.எம்.ஐ. என்பது எப்படி ஒரு வசதியின் போர்வையில் வரும் கண்ணியாக இருக்கிறது?பண்டிகை இ.எம்.ஐ-யின் கவர்ச்சியும், அதன் பின்விளைவுகளும்இந்த ஆபரின் வடிவமைப்பு மிகவும் புத்திசாலித்தனமானது. இது பணத்தைச் செலவழிப்பதைப் பற்றிய வேதனையை உணர விடாது. ரூ.80,000 மதிப்புள்ள டிவி, மொத்த தொகையாகப் பார்க்கும்போது மலைக்க வைக்கும். ஆனால், அதை மாதத்திற்கு ரூ.6,600 எனப் 12 மாதங்களுக்குப் பிரித்தால், அது எளிதானது போலத் தெரியும். இதே தந்திரம் ஃபோன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏன் பயணப் பொதிகளுக்கும் பொருந்தும். சிறிய எண்கள் பெரிய செலவுகளைப் பாதிப்பில்லாததாகக் காட்டும்.1. அதிக செலவு செய்யும் மனநிலை:ஒருமுறை நாம் தவணைகளில் பணம் செலுத்தலாம் என்று முடிவெடுத்துவிட்டால், நம் பட்ஜெட்டைத் தாண்டி செலவழிக்கத் தொடங்குவோம். ரூ.20,000 விலையுள்ள ஃபோனுக்குப் பதிலாக, “மாதத்திற்கு இன்னும் கொஞ்சம் தானே” என்று ரூ.35,000 மாடலை வாங்குவோம். இது கடனாகத் தெரியாது, ஆனால் அது கடன் தான்.2. இ.எம்.ஐ.-களின் பெருக்கம்:ஒரே ஒரு இ.எம்.ஐ. மட்டும் இருப்பதில்லை. புதிய ஃபோன், வாஷிங் மெஷின், சோபா செட் என ஒவ்வொன்றையும் தவணையில் வாங்குவோம். தனித்தனியாகப் பார்க்கும்போது சிறியதாகத் தெரியும் இந்த தவணைகள், மொத்தமாகச் சேரும்போது ஒரு பெரிய சுமையாக மாறும். மாதம் தொடங்குவதற்கு முன்பே நம் சம்பளத்தின் பெரும் பகுதி இவற்றுக்குச் சென்றுவிடுவதை உணர்வோம்.3. மறைக்கப்பட்ட கட்டணங்கள்:“கட்டணமில்லா இ.எம்.ஐ.” என்று சொல்லப்படும் பல திட்டங்களில், ரொக்கப் பணம் செலுத்துபவர்களுக்கான தள்ளுபடிகள் நீக்கப்படுகின்றன அல்லது சிறிய செயலாக்கக் கட்டணங்கள் சேர்க்கப்படுகின்றன. பெயரளவுக்கு வட்டி இல்லை என்றாலும், உண்மையில் நீங்கள் ரொக்கமாக வாங்கியவரைவிட அதிகமாகவே செலுத்துகிறீர்கள்.4. மன அழுத்தமும், இறுக்கமான வாழ்க்கையும்:வாழ்க்கை நிலையானது அல்ல. வேலை மாறலாம், அவசர மருத்துவச் செலவுகள் வரலாம். ஆனால் இ.எம்.ஐ. என்பது மாறாது, அது நிலையான செலவு. ஒரு தவணையைத் தவறவிட்டால் கூட அபராதங்கள், சிபில் ஸ்கோர் பாதிப்பு எனப் பல சிக்கல்கள் வரும். ஆரம்பத்தில் ஒரு நல்ல ஒப்பந்தமாகத் தோன்றிய ஒன்று, பின்னர் மன அழுத்தத்தின் ஆதாரமாக மாறும்.5. வாங்கிய பொருளைப் பற்றிய வருத்தம்:சில மாதங்கள் கழித்து நாம் வாங்கிய பொருளைப் பயன்படுத்தவே மாட்டோம். ஆனால் அதற்கான பணம் மட்டும் செலுத்திக்கொண்டே இருப்போம். பண்டிகையின் மகிழ்ச்சி விரைவில் மறைந்துவிடும், ஆனால் இ.எம்.ஐ. நினைவூட்டல் மட்டும் தொடர்ந்து வரும். கொண்டாட்டங்கள் முடிந்த நீண்ட காலத்திற்குப் பிறகும் ஒரு அமைதியான சுமையாக அது நம்மை அழுத்திக்கொண்டே இருக்கும்.யார் இந்த வலையை விரிக்கிறார்கள்?நிறுவனங்களுக்கு, இந்தியர்கள் செலவு செய்ய மிகவும் தயாராக இருக்கும் நேரம் பண்டிகைகள் என்பது தெரியும். வங்கிகள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் பல மாதங்களுக்கு முன்பே “பண்டிகை நிதி” திட்டங்களை வடிவமைக்கிறார்கள். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்கள் தங்கள் தீபாவளி விற்பனையை, தள்ளுபடியை விட இ.எம்.ஐ. பேனர்களைச் சுற்றியே கட்டமைக்கின்றன. ஒரு சாதாரண ஆர்டர் மதிப்பு ரூ.20,000-லிருந்து தவணைகளில் வாங்குபவர் மூலம் ரூ.35,000 ஆக உயரும். இது அவர்களுக்குக் கிடைத்த உண்மையான வெற்றி.மொபைல் செயலிகள் “கட்டணமில்லா இ.எம்.ஐ.” என்பதை வாங்கும் பொத்தானுக்கு அருகிலேயே வைத்து, சில சமயம் முன்பே அதைத் தேர்ந்தெடுத்து வைக்கின்றன. “அன்லிமிடெட் கொண்டாடுங்கள்” எனத் தலைப்புடன் கூடிய விளம்பரங்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்வதைக் காட்டுகின்றன. சமூக ஊடகங்களில் பிரபலங்கள் புதிய ஃபோன்களை “இ.எம்.ஐ.-யில்” வாங்குவது பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். கடன் மூலம் செலவு செய்வது சாதாரணமானது மட்டுமல்ல, அது ஒரு பெருமையான விஷயம் என்ற செய்தி நம்மைச் சுற்றிப் பரப்பப்படுகிறது.கொண்டாட்டத்திற்குப் பின்னால் உள்ள சோகம்!அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிரெடிட் கார்டு மூலம் இ.எம்.ஐ. பயன்பாடு 30-40% அதிகரிப்பதாகத் தரவுகள் காட்டுகின்றன. இந்த உயர்வு பட்டாசுகளுடன் மறைந்துபோவதில்லை; அது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் மாதாந்திர கட்டணங்களாகத் தங்கியிருக்கிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கூட பல குடும்பங்கள் இன்னும் பண்டிகை நாட்களில் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தி வருகின்றன.தந்தை தன் குழந்தைகளுக்கு நல்ல டிவி வாங்கிக் கொடுக்க வேண்டியது தன் கடமை என்று குற்ற உணர்ச்சி கொள்கிறார். ஒரு இளம் நிபுணர், தன் சகாக்கள் புதிய ஃபோன்களைப் பயன்படுத்தும்போது, தனக்கு ஒன்று இல்லையே என்று உணர்கிறார். இவை நிதி முடிவுகள் அல்ல; இவை சந்தைப்படுத்துதல் மூலம் தூண்டப்பட்ட சமூக அழுத்தங்கள்.மார்ச் மாதத்தில், பள்ளி கட்டணங்கள் அல்லது மருத்துவச் செலவுகள் வரும்போது, இ.எம்.ஐ.கள் இன்னும் செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குடும்பங்கள் தங்கள் செலவுக்கான வருமானம் குறைந்துவிட்டது என்பதை உணர்வார்கள். பண்டிகை வாங்குதலால் ஏற்பட்ட இந்தச் சுமை, மகிழ்ச்சியைவிட மன அழுத்தத்தையே அதிகம் கொடுக்கும்.இந்த பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?பண்டிகைகளின்போது கொண்டாடுவதற்கு அல்லது செலவு செய்வதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், அந்த மகிழ்ச்சியை கடனுடன் ஏன் பிணைக்க வேண்டும்? ஒரு வாரம் நீடிக்கும் கொண்டாட்டத்திற்காக, பல மாதங்கள் நீடிக்கும் கடனில் ஏன் சிக்க வேண்டும்? “கட்டணமில்லா இ.எம்.ஐ.” என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், ஒரு நிமிடம் யோசியுங்கள். உங்களை நீங்களே ஒரு எளிய கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்: இது எனக்கு உண்மையிலேயே தேவையா, அல்லது இந்த சலுகை என்னை அப்படி உணர வைக்கிறதா? பதில் உறுதியற்றதாக இருந்தால், ஒருவேளை பின்வாங்குவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.பண்டிகைகள் சிரிப்பு, சந்திப்புகள், மகிழ்ச்சி மற்றும் விளக்குகளுக்காக நினைவுகூரப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரும் பில்களுக்காக அல்ல. முழுமையாகக் கொண்டாடுங்கள், ஆனால் உங்கள் சுதந்திரத்தை இழக்காதீர்கள். கடன் பண்டிகையின் மகிழ்ச்சியை விட நீண்ட காலம் வாழ அனுமதிக்காதீர்கள்.